ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு


ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.4 லட்சம் திருட்டு
x

வெள்ளகோவிலில் ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். வங்கியில் இருந்து எடுத்து வந்த சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

திருப்பூர்

வெள்ளகோவிலில் ஸ்கூட்டரில் விவசாயி வைத்திருந்த ரூ.4 லட்சத்தை மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். வங்கியில் இருந்து எடுத்து வந்த சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரூ.4 லட்சம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள கம்பளியம்பட்டி அரண்மனைபுதூரை சேர்ந்த விவசாயி விஜயராஜ் (வயது 60). இவர் நேற்று மதியம் 12 மணிக்கு வெள்ளகோவிலில் கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு ஸ்கூட்டரில் வந்தார். வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்துக்கொண்டு அதை ஸ்கூட்டரில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து அரண்மனைபுதூருக்கு புறப்பட்டார்.

வரும் வழியில் வெள்ளகோவிலில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் ஒரு காய்கறி கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கினார். பின்னர் மீண்டும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த பின்பு ஸ்கூட்டரின் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விஜயராஜ் வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை

புகாரின் பேரில் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், விஜயராஜ் காய்கறி கடைக்குச் சென்று திரும்புவதற்குள் அவரது ஸ்கூட்டரின் பெட்டியை உடைத்து ரூ.4 லட்சத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த ஆசாமிகள் வந்த மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டுச்சம்பவம் வெள்ளகோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story