'சீன லைட்டர்'களுக்கு மத்திய அரசு தடையால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது -அண்ணாமலை பேச்சு


சீன லைட்டர்களுக்கு மத்திய அரசு தடையால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது -அண்ணாமலை பேச்சு
x

‘சீன லைட்டர்’களுக்கு மத்திய அரசு தடை விதித்ததால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்று அதிக அளவில் உற்பத்தி நடந்து வருகிறது என சாத்தூர் நடைபயணத்தின்போது அண்ணாமலை பேசினார்.

சிவகாசி,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபயணத்தை தொடங்கினார். முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். கோரிக்கைகள் குறித்து அவரிடம் பலர் மனுக்களை அளித்தனர்.

சாத்தூர் டவுன் போலீஸ் நிலையம் அருகில் வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது:-

காரசேவுக்கு புவிசார் குறியீடு

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பெருந்தலைவர் காமராஜர் 3 முறை சட்டமன்றத்துக்கு தேர்வாகி உள்ளார். அதனால் நல்லவர்களை தேர்வு செய்வதில் நீங்கள் வல்லவர்கள்.

சாத்தூர் காரசேவுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைத்துவிடும். அதன் பின்னர் காரசேவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவது சுலபமாகிவிடும். சாத்தூர் பகுதி போதிய வளர்ச்சி அடையவில்லை. மாதத்துக்கு ஒரு முறைதான் குடிநீர் வருவதாக பெண்கள் தெரிவிக்கிறார்கள். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேவையான தண்ணீரை தமிழக அரசு வழங்கவில்லை.

தீப்பெட்டி தொழில்

இந்த பகுதியில் சுமார் 4 ஆயிரம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. சீன லைட்டரை மத்திய அரசு தடை செய்துள்ளதால் தீப்பெட்டி தொழில் புத்துணர்வு பெற்றுள்ளது.

சாத்தூர் பகுதியில் இருந்து அதிக அளவில் தீப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்தியாவில் புதிதாக 7 ஜவுளி பூங்கா தொடங்க முடிவு செய்யப்பட்டு, அதில் ஒன்றை அருப்புக்கோட்டை பகுதியில் அமைக்க பிரதமர் நரேந்திரமோடி வழங்கி உள்ளார். இதன் மூலம் 22 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்.

பிரதமராக மோடி வருவார்

முத்ரா கடன் திட்டத்தில் தமிழகத்துக்கு மட்டும் நரேந்திர மோடி ரூ.2 லட்சம் கோடி கடனாக கொடுத்து இருக்கிறார். அந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர்.

2024-ல் நாடாளுமன்ற தேர்தலில் 400-க்கும் மேற்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களை பெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவார். அதில் 40 எம்.பி.க்களை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பா.ஜனதா கூட்டணி சார்பில் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேசிய கொடி வாங்கினார்

முன்னதாக நடைபயணத்தின்போது ஏராளமான இளைஞர்கள் அண்ணாமலையுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். படந்தால் பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று அங்குள்ளவர்களிடம் நலம் விசாரித்து, டீ குடித்தார். சாத்தூர் தபால் நிலையத்துக்கு வந்த அண்ணாமலை அங்கு தேசிய கொடிகளை வாங்கினார்.

பின்னர் விருதுநகர் மாவட்ட நடைபயணத்தை முடித்துக்கொண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.


Next Story