கோவில் பெயருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும்


கோவில் பெயருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும்
x
திருப்பூர்

திருப்பூர்:

கோவில் நிலங்களை அளவீடு செய்து கோவில் பெயருக்கு மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

முறையற்ற குடிநீர் இணைப்பு

செவந்தாம்பாளையம் மாகாளியம்மன், மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளையினர் அளித்த மனுவில், 100 வருடங்களுக்கு மேலாக கோவில் கட்டி சாமி கும்பிட்டு வருகிறோம். கோவில் நத்தம் நிலத்தில் இருப்பதால் கோவில் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய முடியாமலும், மின் இணைப்பு பெற முடியாமலும் உள்ளது. கோவில் நிலங்களை அளவீடு செய்து கோவில் பெயருக்கு நிலத்தை மாற்றிக்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

திருமுருகன்பூண்டிநகராட்சி பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அளித்த மனுவில், 'திருமுருகன்பூண்டி நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு தேவை என்ற நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி நிர்வாகம் வருகிற ஜூன் மாதம் முதல் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்தஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான முறைகேடான குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக பிரதான பகிர்மான குழாய் அமைக்காமல், இணைப்பு கொடுக்காமல் ஏற்கனவே முறைகேடாக இணைப்பு பெற்றவர்கள் தண்டத்தொகையை செலுத்தி இணைப்பு பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். நகராட்சிக்கு வருவாய் இழைப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

பொதுவழித்தடம் ஆக்கிரமிப்பு

திருமுருகன்பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் அளித்த மனுவில், 'ராக்கியாபாளையம் கிராமத்தில் 2.41 ஏக்கரில் புதிய குடியிருப்பு மனைப்பிரிவு அமைக்க உத்தேசித்து நகர்மன்றத்தில் பார்வைக்கு வந்துள்ளது. ஆனால் அங்கு குடிநீர் மேல்நிலைத்தொட்டி அமைக்கப்படவில்லை. மழைநீர் வடிகாலில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதி இல்லை. அந்த வசதிகளை செய்து அதன்பின்னர் அனுமதி வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'நீர்நிலை புறம்போக்கில் வீடு இருப்பதால் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கேட்கிறார்கள். பணம் இல்லையென்றால் அடுக்குமாடி வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்கிறார்கள். நாங்கள் கூலி வேலை செய்கிறோம். அதனால் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

அவினாசி பழங்கரை பெரியாயிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'எங்கள் பகுதியில் பொது வழித்தடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story