கசக்கால்வாயை தூர்வார கலெக்டர் உத்தரவு


கசக்கால்வாயை தூர்வார கலெக்டர் உத்தரவு
x

விவசாயி கொடுத்த மனுவின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு கசக்கால்வாயை தூர்வார உத்தரவிட்டார்.

வேலூர்

விவசாயி கொடுத்த மனுவின் பேரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டு கசக்கால்வாயை தூர்வார உத்தரவிட்டார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் பேயாற்றிலிருந்து உருவாகும் நீர்வரத்து கசக்கால்வாய்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் உள்ளதால் ஆற்று வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே இந்த கசக்கால்வாயை தூர்வார வேண்டுமென வெட்டுவானம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு உத்தரவு வந்துள்ளது. அதன்படி நேற்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கசக்கால்வாய் மற்றும் நீர் வரத்து கால்வாய், மோர்தானா கால்வாய் உள்ளிட்ட 8 கால்வாய்களில் ஆய்வு மேற்கொண்டார்.

தூர்வார உத்தரவு

அப்போது பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட மங்கலம் செல்லும் சாலையில், சராதி பேட்டை பகுதியில் பேயாற்றின் கரையோரம் அமைக்கப்பட்டிருக்கும் சாலை பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. அதிலிருந்து பிரியும் கசக்கால்வாய் தூர்வாரப்படாததால் பேயாற்றில் ஏற்படும் வெள்ளம் விவசாய நிலங்களில் புகுந்து பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகவே உடனடியாக மங்கலம் செல்லும் சாலையில் ஏற்பட்டிருக்கும் உடைப்புகளை சீரமைத்து தடுப்புச் சுவர்களை எழுப்ப வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். மேலும் அங்கிருந்து உற்பத்தியாகும் 5 கசக்கால்வாய், இரண்டு நீர் வரத்து கால்வாய் உள்ளிட்ட 8 கால்வாய்களை உடனடியாக தூர் வாரவும் அவர் உத்தரவிட்டார்.

வீட்டுமனை பட்டா

வெட்டுவானம் பேரூராட்சி பகுதியில் குடியிருப்புப் பகுதியில் வீடுகளுக்கு பட்டா வழங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பாபு, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, தலைவர் சுபபிரியா குமரன், நகர செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விபத்தில் சிக்கியவருக்கு உதவி

முன்னதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளிகொண்டா சென்று கொண்டிருந்தபோது பொய்கை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காயமுற்று இருந்த நபருக்கு முதலுதவி செய்து ஆட்டோவில் ஏற்றி அருகாமையில் உள்ள பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். மேலும் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க டாக்டரிடம் அறிவுறுத்தினார்.


Next Story