2-ம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம்


2-ம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடக்கம்
x

விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

விருதுநகர்

தாயில்பட்டி,

விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்விற்கு அளவீடு செய்யும் பணி தொடங்கியது.

முதல் கட்ட அகழாய்வு

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் கடந்தாண்டு செப்டம்பரில் முடிவடைந்தது. 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அளவீடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள், விலை உயர்ந்த சூது பவளம், நெசவுத் தொழில் பயன்படுத்தக்கூடிய தக்கலி, ஏராளமான மண்பானைகள், மனித உருவ பொம்மை, அகல் விளக்கு, புகை பிடிப்பான் கருவி, யானை தந்தத்தால் ஆன அணிகலன்கள், தொங்கட்டான்கள், சிறு குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய விளையாட்டு பொருட்கள், விசில், திமில் காளையின் சிற்பம், வணிக முத்திரை, செப்பு நாணயம், விலங்குகளின் எலும்புகள், கோடரி கருவிகள், தங்க அணிகலன்கள், வட்ட சில்லுகள், பாசிமணிகள், உள்ளிட்ட 3,254 அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அளவீடு செய்யும் பணி

2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 3 ஏக்கர் இடத்தை தொல்லியல் துறையினர், வருவாய்த்துறையினருடன் சேர்ந்து அளவீடு மற்றும் சுத்தம் செய்யும் பணி நடந்தது. மேலும் புதிதாக 18 குழிகள் ஆய்வு செய்ய அளவீடு செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிற்கு பின்னர் ஏப்ரல் மாதத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க உள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன்னுசாமி தெரிவித்தார்.


Next Story