வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி-கலெக்டர் தகவல்


வருகிற 15, 17-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி-கலெக்டர் தகவல்
x

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 15 மற்றும் 17-ந் தேதிகளில் பேச்சுப்போட்டி நடைபெற இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

நாமக்கல்:

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேச்சுப்போட்டி

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வருகிற 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் மற்றும் 17-ந் தேதி பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மதியம் 2 மணி முதல் தொடங்கி நடத்தப்படும். இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்படஉள்ளது.

போட்டி தலைப்புகள்

மேலும் இதில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு பரிசாக வழங்கப்படும். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் தாய்மண்ணிற்கு பெயர் சூட்டிய தனயன், மாணவருக்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் போன்றவை ஆகும். பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் ஆகும்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டிக்கான தலைப்புகள் பேரறிஞர் அண்ணாவும், தமிழக மறுமலர்ச்சியும், அண்ணாவின் சமுதாய சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் போன்றவை ஆகும். பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலக சிந்தனையாளர்களும் பெரியாரும் போன்றவை ஆகும்

முதல்வர் அனுமதி

நாமக்கல் மாவட்டத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அதில் அவர்கூறி உள்ளார்.


Next Story