போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு போட்டி


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு போட்டி
x

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறினார்.

விருதுநகர்

சிவகாசி,

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமயில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு போட்டிகள் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்துவது, கல்லூரி மாணவர்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல், அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் தாசில்தார்கள் ஆனந்தராஜ், செந்தில்குமார், ராமதாஸ், துணை தாசில்தார்கள் பார்வதி, அருளானந்தம், முனியாண்டி, தனம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய தாலுகாவில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த 29 முதல்வர்கள், வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள்

இதுகுறித்து சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கூறியதாவது,

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களுக்கு நாடகம், கவிதை போட்டி, ரங்கோலி போட்டி ஆகியவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சுதந்திரதினவிழாவின் போது கலெக்டர் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகள் வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்கு அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியில் நடக்கிறது. இதேபோல் கல்லூரிகளில் பணியாற்றும் அலுவலர்கள், பயிலும் மாணவர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேலும் அரசு பள்ளியில் தமிழ்வழி கல்வியில் மூலம் 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்பதற்கான உயர்கல்வி உறுதி திட்டத்தில் ரூ.1000 மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டத்தில் நிலுவையில் உள்ள மாணவிகளுக்கு உதவி தொகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story