'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருவாரூர்

'தினத்தந்தி' புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

திருவாரூர் புதிய பஸ் நிலையத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மூக்கை மூடியபடி காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், பஸ் நிலையத்துக்குள் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நலன் கருதி திருவாரூர் பஸ் நிலையத்துக்குள் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், திருவாரூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதி மானாநல்லூர் கோவில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த சாலை பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், மானாநல்லூர்.


Next Story