தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேலம்

பயன்பாடு இல்லாத பயணிகள் நிழற்குடை

தர்மபுரி அருகே தோக்கம்பட்டி பகுதியில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாலையோரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயணிகள் நிழற்குடையின் முன்பகுதியில் பார்த்தீனிய செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் பயன்பாடு இல்லாத இந்த பயணிகள் நிழற்குடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், ஒட்டப்பட்டி.

------

ஆபத்தான டிரான்ஸ்பார்மர்

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் சின்ன புனல்வாசல் ஊராட்சி உள்ளது. இந்த பகுதியில் சாலை ஓரத்தில் சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அச்சப்பட்டு இந்த சாலை வழியாக செல்கின்றனர். இதுபற்றி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் பலன் இல்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரகுவரன், சின்னபுனவாசல், கெங்கவல்லி.

===

சீரமைக்க வேண்டிய நடைபாதை

ஓசூர் அந்திவாடி பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள சிமெண்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையின் இருபுறமும் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இந்த பாதையில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த பகுதியில் செடி, கொடிகளை அகற்றி நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், ஓசூர்.

===

நோய் பரவும் அபாயம்

நாமக்கல் மாவட்டம் தத்தாதிரிபுரம் கிராமத்தில் சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், கழிவுபொருட்கள் கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் கால்வாயில் தேங்கி நிற்கிறது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாக்்கடை கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விக்னேஷ், தத்தாத்திரிபுரம், நாமக்கல்.

===

சேதமடைந்த கட்டிடம்

சேலம் சூரமங்கலம் மாநகராட்சி கட்டிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீ விபத்தால் முழுவதுமாக சேதமடைந்தது. இதில் கட்டிடம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெரால்டு, சூரமங்கலம், சேலம்.

===

குண்டும், குழியுமான சாலை

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த காளிப்பட்டியில் புதியபாவடி தெரு உள்ளது. ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் இந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் வழியாக செல்லவே பொதுமக்களும், வாகனஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதனால் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பதே இந்த பகுதிமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

-சுப்பிரமணி, காளிப்பட்டி, சேலம்.

===

வேகத்தடைக்கு வர்ணம் பூசவேண்டும்

சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் சாலையில் புதுசாம்பள்ளி உள்ளது. இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வேகத்தடை இருந்தும் இல்லாதது போன்று காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் வேகத்தடை தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும். மேலும் வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகையை சாலையோரம் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில் முருகன், மேட்டூர்.


Next Story