தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சி சிவசண்முகபுரம், சிங்கம்பத்து, தம்பிதோப்பு மற்றும் சேரன்மாதேவி பிரதான சாலையையும் இணைக்கும் உப்பாற்று பாலம் பழுதடைந்து தடுப்புச்சுவர் இல்லாமல் இருக்கிறது. இதனால் அந்த பாலத்தில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே பாலத்தில் உடனடியாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

சிதம்பரநாதன், கருவேலன்குளம்.

சிக்னல் கம்பம் அமைக்கப்படுமா?

மூலைக்கரைப்பட்டி நகரத்தின் வடக்குப்பகுதியில் உள்ள பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இந்த பாலத்தின் தொடக்கம் மற்றும் முடிவு பகுதிகளில் சோலார் மின்சிக்னல் கம்பம் அமைத்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மணிகண்டன், கடம்பன்குளம்.

கிடப்பில் கிடக்கும் சாலை பணி

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் முதல் சங்கனாபுரம் வரையில் சாலை அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி கடந்த ஒரு ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பிரவீன்குமார், பார்க்கநேரி.

பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முடவன்குளத்தில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் ஆங்காங்கே உடைந்தும், விரிசல் விழுந்தும் காணப்படுகிறது. இதனால் அதில் காத்திருக்கும் பயணிகள் அச்சப்படுகிறார்கள். எனவே பயணிகள் நிழற்கூடத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஸ்டாலின், பெருங்கண்ணன்குளம்.

பழுதடைந்த மின்கம்பம்

மணிமுத்தாறு அருகே உள்ள ஆலடியூர் சிவன் கோவில் தெருவில் மின்கம்பத்தின் அடிப்பகுதி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பிரேம், ஆலடியூர்.

வாகன ஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டியில் இருந்து பூவனூர் மற்றும் அரியப்பபுரம் செல்லும் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுவதுடன் அதில் தண்ணீரும் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

விஜயபாஸ்கர், சென்னல்தா புதுக்குளம்.

கட்டிடம் சீரமைக்கப்படுமா?

குண்டாறு அணைப்பகுதியில் வனத்துறையினர் தங்குவதற்கு கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆனால் இந்த கட்டிடங்கள் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால் பழுதடைந்து காணப்படுகின்றன. ஆகவே அந்த கட்டிடங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கனியமுதன், செங்கோட்டை.

சாய்ந்து கிடக்கும் கம்பம்

கடையம் பஞ்சாயத்து தெற்கு கடையம் தெருவில் உள்ள பி.எஸ்.என்.எல். இரும்பு கம்பம் அருகில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் சாய்ந்து கிடக்கிறது. எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் இந்த இரும்பு கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

திருக்குமரன், கடையம்.

சுகாதாரக்கேடு

கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட மேலப்பாவூர் கீழக்காலனி கிராமத்தில் கழிவுநீர் செல்வதற்கு வாறுகால் கட்டப்பட்டது. அதில் கழிவு பொருட்கள் கொட்டப்படுவதால் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஆகவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராஜ், மேலப்பாவூர்.

அங்கன்வாடி மைய சுவரில் விரிசல்

கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து சேனை தலைவர் தெருவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாததால் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் சுவரில் இருந்து சிமெண்டு பூச்சுகளும் பெயர்ந்து விழுகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இந்த கட்டிடத்தை சீரமைக்க கேட்டுக் கொள்கிறேன்.

அம்ஜத், முதலியார்பட்டி.


Next Story