புகார் பெட்டி


புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

குண்டும், குழியுமான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா திருப்பாச்சேத்தியின் திடல் பகுதியில் பல ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. அதே பகுதியில் கால்நடை மருத்துவமனையும், நெல் கொள்முதல் நிலையமும் உள்ளது. இங்கு செல்லக்கூடிய சாலை மிகவும் மோசமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும்.

கார்த்திகேயன், திருப்புவனம்.

தொற்றுநோய் அபாயம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பாப்பாஊரணி 34-வது வார்டில் தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. சாலையில் தேங்கி தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், காரைக்குடி.

தொடர் மின்தடை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, கச்சாத்த நல்லூர் கிராமத்திற்கு மானாமதுரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஊரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த், இளையான்குடி.

பள்ளமான சாலை

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.வி. மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிக்கரைப்பட்டி தெருவில் தார் சாலையில் இருந்து தெருவிற்கு வரும் சாலை மிகவும் பள்ளமாக உள்ளது. சாலையில் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் சாலையில் பயணிப்பதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முருகன், சிங்கம்புணரி.

கொசுத்தொல்லை

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் கொசுக்கடியால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் தூக்கமின்றி அவதியடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர்.



Next Story