இருக்கூரில் சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


இருக்கூரில் சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

கபிலர்மலை அருகே இருக்கூரில் உள்ள சீதளா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

கும்பாபிஷேகம்

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே இருக்கூரில் உள்ள செல்வவிநாயகர், பாலமுருகன் மற்றும் சீதளா மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கடந்த 7-ந் தேதி விநாயகர் வழிபாடு, புண்யாகம் மற்றும் கிராம சாந்தி நடைபெற்றது. 8-ந் தேதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி யானை, பசு, குதிரை மற்றும் ஒட்டகம் ஆகியவை முன் செல்ல‌ புனித தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

மாலையில் முளைப்பாரி அழைத்தல், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பூமி பூஜை, யாக பூஜை மற்றும் தீபாராதனை, முதற்கால யாக பூஜை நடந்தது. 9-ந் தேதி புண்யாகம், பூத சோதனம் மற்றும் பூர்ணாகுதியும், புதிய விக்ரகங்களுக்கு கண் திறப்பும், 2-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இரவு 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது.

சாமி தரிசனம்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு யாக பூஜை, ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதியும் 4-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும், 8.30 மணிக்கு சீதளா மகா மாரியம்மன் குறிஞ்சி விமான கும்பாபிஷேகமும், காலை 9 மணிக்கு அனைத்து மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மகாஅபிஷேகம், தசதானம், தசதரிசனம், தீபாராதனை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இருக்கூர், கபிலர்மலை மற்றும் பரமத்தி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story