கொரோனா போய்விட்டதா? இனி பயம் இல்லையா?மருத்துவர்கள், பொதுமக்கள் கருத்து


தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:45 PM GMT)
தர்மபுரி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019-ம் ஆண்டு பரவத் தொடங்கியது. இது ஒரு வகையான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய் என்பதால் தும்மும் போதும், இருமும் போதும் வெளியேற்றப்படும் சிறிய நீர்த்துளிகள் வழியாக அடுத்தவர்களுக்கு எளிதாக பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்தது.

பொதுமக்கள் அச்சம்

இந்த தொற்றால் இறந்தவர்களின் உடலை குடும்பத்தினர்கூட அருகில் சென்று பார்க்க முடியாத அளவுக்கு பரிதாபநிலை ஏற்பட்டது. உலகில் உயிர்களை பறித்ததுடன், மனிதர்களை மட்டும் அல்லாது அரசாங்கங்களையும் கடந்த சில ஆண்டுகளில் தலைகீழாகப் புரட்டி போட்டது கொரோனா.

தடுப்பூசிகள் மூலம் அதன் பரவலை தடுத்துவிட்டாலும் தற்போது 4-வது அலை, 5-வது அலை வரப்போகிறது என்றெல்லாம் ஆங்காங்கே புரளிகள் புரண்டு வருவதால், பொதுமக்கள் கொஞ்சம் அச்சப்படத்தான் செய்கின்றனர்.

பயணங்கள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் போதுகூட கண்டிப்பு இல்லாவிட்டாலும் தற்காப்புக்காக ஒரு சிலர் முக கவசங்கள் அணிந்து செல்வதையும் காணமுடிகிறது. உண்மையில் கொரோனா ஒழிந்து விட்டதா? தைரியமாக நடமாடலாமா? பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்லலாமா? என்று பலதரப்பட்ட கேள்விகளை பொதுமக்கள் கேட்கின்றனர். அதற்கு மருத்துவர்களும், பொதுமக்களும் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.

இணை நோய்கள்

கொரோனா தீவிரமாக பரவி வந்த போது, அதன் சிகிச்சைக்காக ஒருங்கிணைந்து பணியாற்றிய கதிரியக்க துறை நிபுணர் மருத்துவர் வி.ஆனந்தகுமார்:-

கொரோனா வைரஸ் பெரும் கொள்ளை நோயாக மாறி உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்களின் வாழ்வியல் பாதிப்பு, தேக்க நிலைகளை உண்டாக்கியது. ஆனால் தற்போது 3-ம் நிலையில் பெரிய அளவில் கொரோனாவால் பாதிப்பு ஏற்படவில்லை. இருந்தாலும் சாதாரணமாக வரும் சளி, காய்ச்சல் போன்று கொரோனா உருமாறி வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இப்போதும் கொரோனாவுக்கு தீவிர சிகிச்சை மற்றும் இறப்புகளும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சீனாவில் கொரோனா இருக்கக் கூடாது என்ற அந்த நாட்டு அரசின் திட்டத்திற்கு ஏற்ப பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரையில் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளை சேர்ப்பது மற்றும் இறப்பு போன்றவை குறைவாக இருக்கிறது.

பொதுவாக தொற்று வந்து போனதற்குப் பிறகு இயற்கையில் ஏற்படும் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பு ஊசி போட்டதற்கு பிறகு ஏற்படும் எதிர்ப்பு சக்தி இந்த இரண்டும் இருந்தால் நல்லது. நம் நாட்டில் பொதுமக்களிடம் எதிர்ப்பு சக்தி உள்ளது. வரும் காலங்களில் எதிர்ப்பு சக்தி குறையும் போது பல இடங்களில் பூஸ்டர் என்ற தடுப்பு ஊசி போடப்படலாம். ஆனால் 3-ம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு வராததால் பூஸ்டர் போடுவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. இருந்தாலும் நாமும் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சோதனைகளுக்கு செல்லும் போதும் முக கவசத்தை அணிந்து செல்வது நல்லது.

ஆனால் பொதுமக்களுக்கு இதுகுறித்து பயம் தேவையில்லை. முன்பரிசோதனை, தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை முறையில் நாம் பலம் வாய்ந்து இருப்பதால் பொதுமக்களுக்கு வாழ்வியல் பாதிப்பு, கல்வி, வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. காற்றில் பல வித தொற்றுகள் இருப்பதால் புதிய வாழ்வியல் முறையாக முக கவசம் எப்போதும் அணிவது நல்லது. அதேபோல் சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு, சுய தற்காப்பு முறைகளை கடைப்பிடிப்பது நன்மையைத் தரும். அதேநேரம் எதிர்ப்பு சக்தியை முறையாக பராமரிப்பது, இணை நோய்களை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

விரைவில் குறைந்து விடும்

தர்மபுரியை சேர்ந்த அரசு மருத்துவர் ரமேஷ்பாபு:-

கொரோனா தொற்று பரவல் ஏற்கனவே 2 முறை ஏற்பட்டு விட்டது. இதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இதனால் 3-வது அலை வந்தாலும் அதன் தாக்கம் விரைவில் குறைந்து விடும். இருந்தபோதிலும் பொது இடங்களில் முககவசம் அணிவது, வெளியிடங்களுக்கு சென்று வந்தால் கை, கால்களை சுத்தமாக கழுவுவது ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இப்போது குளிர்காலம் முடிந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் தனது செயல்பாட்டை மாற்றிக்கொள்ள ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். அப்போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி பிடித்தல், உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்கனவே இருப்பவர்களுக்கு அவற்றின் பாதிப்பு அதிகரிக்கலாம். இதை தடுக்க காய்கறிகள், பழங்கள், எளிதில் செரிமானமாகும் புரதச்சத்து கொண்ட உணவுகளை தேவையான அளவில் சாப்பிட வேண்டும்.

சீசனுக்கு ஏற்ப பரவுகின்றன

பாலக்கோட்டை சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன்:-

கொரோனா தொற்று தாக்கம் இன்னும் இருக்கிறது. பல்வேறு வைரஸ் கிருமிகள் சீசனுக்கு ஏற்ப பரவுகின்றன. இதனால் வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருந்த காலத்தில் எத்தகைய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றினோமோ அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவை சாப்பிட வேண்டும். இனி வரும் காலத்தில் மேலும் பல வைரஸ் கிருமிகளின் தாக்குதல் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கையுடன் பொதுமக்கள் செயல்பட வேண்டும்.

தாக்கம் குறையவில்லை

ஏரியூரை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் தமிழ்ச்செல்வன்:-

கொரோனா தொற்று பரவல் குறைந்துவிட்டது. ஆனால் அதனால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் குறையவில்லை. பெரும்பாலானவர்கள் உடல்நிலை பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத நிலையில் உள்ளனர். கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு உடலில் இருந்த நோய் எதிர்ப்பு சக்தி இப்போது பாதியாக குறைந்து உள்ளது. இதனால் முன்பு சுறுசுறுப்பாக செயல்பட்ட பலர் இப்போது விரைவிலேயே சோர்வடைந்து விடுகிறார்கள். இந்த நிலை இன்னும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்று தெரியவில்லை.

தொடர்ந்து பின்பற்ற வேண்டும்

இண்டூரை சேர்ந்த இயற்கை ஆர்வலர் தமிழ்ச்செல்வன்:-

கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை மிக முக்கிய பங்கு வகித்தன. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்ட போது மட்டுமே பெரும்பாலானவர்கள் இவற்றை பயன்படுத்தினார்கள். ஆனால் உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கு இவற்றை வாரம் ஒரு முறையோ, 15 நாட்களுக்கு ஒரு முறையோ தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை நோய் பாதிப்பு ஏற்படும் போது மட்டுமே கடைபிடிக்காமல் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இனிமேல் பல்வேறு வைரஸ் கிருமிகளின் பரவல் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்கான திறன் நமக்கு கிடைக்கும்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பாலக்கோட்டை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ராணி:-

கொரோனா நோய் முற்றிலும் போய்விட்டது என்று உறுதியாக கூற முடியாது. எனவே தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும். இந்த நோய் தொற்றை தடுக்க கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அதேபோல் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். கைகளை கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்றவற்றை தொடக்கூடாது. இதனாலும் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. கொரோனா நோய் தொற்று பாதிப்பு முழுமையாக ஒழிந்து விட்டது என்று டாக்டர்கள் உறுதிப்படுத்தும் வரை முககவசம் அணிய வேண்டும். இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story