தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க கோரிக்கை


தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.

தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் பிர்க்கா, எட்டபுரம் தாலுகா படர்ந்தபுளி, கயத்தார் தாலுகா காமநாயக்கன்பட்டி, கடம்பூர், கழுகுமலை, குருமலை, ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 2020-21, 2021-22 ஆண்டுகளில் பயிர்காப்பீட்டில் குளறுபடி நடந்து உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

சுகாதார சீர்கேடு

தூத்துக்குடி சிவபாரத இந்து மக்கள் இயக்கம் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடி-நெல்லை நெடுஞ்சாலையில், மறவன்மடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. ஆகையால் சமபந்தப்பட்ட நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மச்சேந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் தமிழகத்தில் வேலைவாய்ப்புக்காக தமிழகத்துககு வந்த வடமாநிலத்தினர் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு தப்பி விடுகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்களின் இருப்பு விவரங்களை முழுமையாக கணக்கெடுத்து பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடவடிக்கை

ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் கே.கருணாகரபாண்டியன் மற்றும் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், புளியம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தனியார் காற்றாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பற்ற முறையில் மின்சார வாரியத்தின் மின்ஒயர்களுக்கு நெருக்கமாக மின்வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.


Next Story