தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், முசிறி-தொட்டியம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சாலைகளில் இருந்த பள்ளத்தை சரி செய்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

சரவணன் நடேசன், திருச்சி

சாலையில் குவிந்து கிடக்கும் மணல்

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு வடக்கு ஆண்டார் வீதியில் 4 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் மணல் மேடுபோல குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுவாமிநாதன், திருச்சி

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாநகராட்சி 16,17,18,30,31-வது வார்டு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோரை துரத்திச்சென்று கடிக்க பாய்கின்றன. இதனால் அவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் முதியவர்கள், குழந்தைகள் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சையது முஸ்தபா, பூக்கொல்லை

பஸ்களின் மேற்கூரைகளை சரிசெய்ய கோரிக்கை

திருச்சி மாநகரில் அரசு மாநகர பஸ்களில் சிலவற்றில் இருக்கைகள் மற்றும் மேற்கூரைகள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மேற்கூரையின் வழியே உள்ளே வருகிறது. இதனால் பயணிகள் நனைந்து கொண்டே பயணம் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பஸ்களின் ஜன்னல் கண்ணாடிகள் திறந்து மூடுவதற்கு இயலாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி

எரியாத தெருவிளக்கு

திருச்சி மாவட்டம், மணப்பாறை பட்டி ரோடு அய்யப்பன் நகர் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள ஒரு தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இந்த பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இரவு நேரங்களில் நடந்து செல்வதற்கு குழந்தைகள், முதியவர்கள், பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணப்பாறை


Next Story