'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர், அங்குள்ள காளியப்பர் தெருவில் புதிதாக சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டதாகவும், இதனால் சாலை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக அங்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பஸ் வசதி தேவை

நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி, மேலச்செவல், பத்தமடை ஆகிய ஊர்களில் இருந்து கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் சேரன்மாதேவி சென்று, அங்கிருந்து பஸ் மாறி செல்கின்றனர். இவர்களின் நலன் கருதி பத்தமடை சிவானந்தா மருத்துவமனை செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரவிச்சந்திரன், பத்தமடை.

சாலை பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

அம்பை- நெல்லை வழித்தடத்தில் சாலை விரிவாக்க பணிகள் தற்போது சில மாதங்களாக நடைபெறாமல் மந்தமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் அதிக மக்கள் இருசக்கர வாகனங்களில் சென்று வருகிறார்கள். எனவே, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாா்களா?

ரமணன் ராமசாமி, அகஸ்தியர்பட்டி.

ஊருக்குள் வராமல் செல்லும் அரசு பஸ்

திசையன்விளையில் இருந்து விஜயாபதி பஞ்சாயத்து ஆவுடையாள்புரம் வழியாக நாகர்கோவில் செல்லும் பஸ் (தடம் எண் 561) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் ஊருக்குள் வருவதில்லை. நாகர்கோவில் பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு அதிகாலையில் வரும் இந்த பஸ் வசதியாக உள்ளது. தற்போது முறையாக வராததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே அந்த பஸ், முறையாக ஊருக்குள் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருசாமி, நெல்லை.

சுகாதாரக்கேடு

நெல்லை கொக்கிரகுளம் சிவன் கோவில் எதிரே மெயின் ரோட்டின் ஓரம் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, அங்கு குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

அய்யப்பன், கொக்கிரகுளம்.

அடிப்படை வசதி வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மேற்கு பார்த்த மெய்கண்ட ஈஸ்வரன் கோவிலுக்கு செல்லும் வழியில் மின்விளக்கு, சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், காயல்பட்டினம்.

அரசு பஸ்கள் நிற்குமா?

உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் தனியார் பள்ளிக்கூடம் அருகே பஸ்நிறுத்தம் உள்ளது. இதனை சுற்றி ஐடியல் நகர், செல்வாசிட்டி, எம்.என்.நகர், தாயூப்நகர், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால், அரசு பஸ்கள் மட்டும் நிற்பதில்லை. எனவே, அங்கு அரசு பஸ்களும் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஸ்ரீராம், உடன்குடி.

மந்தமான நடைமேடை மேம்பால பணிகள்

ஆறுமுகநேரி ரெயில் நிலையத்துக்கு தினமும் காலை, மாலையிலும் 7 ரெயில்கள் வந்து செல்கின்றன. 3 முறை கிராசிங் ஏற்படுகிறது. இங்கு நடைமேடை மேம்பால பணிகளுக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அஸ்திவாரம் போடப்பட்டது. அதன் பின்னர் அதற்கான இரும்பு தளவாட பொருட்களும் வந்து பல மாதங்களாக ஆகிவிட்டது. ஆனால் வேலைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ரெயில் கிராசிங் சமயத்தில் 2-வது நடைமேடைக்கு வந்திறங்கும் பயணிகள் 500 மீட்டர் தூரம் நடந்து சென்று தான் முதலாவது நடைமேடைக்கு வர முடியும். இதனால் பயணிகள் குறிப்பாக வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, நடைமேடை மேம்பால பணிகளை விரைவாக முடிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலசங்கர், ஆறுமுகநேரி.

குண்டும், குழியுமான சாலை

குலசேகரன்பட்டினம் திருவருள் உயர்நிலைப்பள்ளியை அடுத்து முப்பிடாதி அம்மன் கோவில் பின்புறம் உள்ள தார் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இன்னும் 2 மாதங்களில் தசரா திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கு அந்த வழியாகத்தான் ஏராளமான பக்தர்கள் நடந்து வருவார்கள். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து காந்திநகர் 3-வது தெருவில் பயன்பாடு இல்லாத பி.எஸ்.என்.எல். தொலைபேசி இரும்பு கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும், அதன் அருகே தினமும் குழந்தைகள் விளையாடுவதாகவும் முதலியர்பட்டியை சேர்ந்த வாசகர் அம்ஜத் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதற்கு உடனடி தீர்வாக அந்த இரும்பு கம்பம் அகற்றப்பட்டு விட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த நிலையில் நூலக கட்டிடம்

பாவூர்சத்திரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூலகம் ஒன்று இயங்கி வருகிறது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே, இந்த கட்டிடத்தை புதுப்பித்து நவீன மயமாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மந்திரமூர்த்தி, பாவூர்சத்திரம்.

சாலையோரம் மண்டிக்கிடக்கும் புதர்

கடையம் சீவலப்பேரியன் கோவில் அருகே சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையோரம் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்கு ஒதுங்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

திருக்குமரன், கடையம்.

மோசமான ரோடு

வீரகேரளம்புதூர் தாலுகா ஆனைகுளத்தில் மெயின் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காதர், ஆனைகுளம்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர்

ஆலங்குளம் அருகே நாலாங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அதன் அருகில் சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதுடன், பாதை இல்லாமல் பள்ளி குழந்தைகள் சாக்கடை கழிவுநீரில் நடந்து செல்லக்கூடிய அவலநிலை உள்ளது. எனவே, முறையாக வாறுகால் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மாரியப்பன், நாலாங்குறிச்சி.


Next Story