'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 2888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்து மருதங்குளம் செல்லும் கால்வாயில் ெபான் இசக்கி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவதாக ஆவுடையாள்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டு உள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்து உள்ளார்.

சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

சேரன்மாதேவி தாலுகா காருகுறிச்சியில் கன்னடியன் கால்வாய் அருகில் சுகாதார வளாகம் உள்ளது. இந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டதில் இருந்து பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- ரிச்சர்டு, காருகுறிச்சி.

வாறுகால் வசதி வேண்டும்

ராதாபுரம் தாலுகா அடங்கார்குளம் பஞ்சாயத்து ஊரல்வாய்மொழியில் தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, வாறுகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- அய்யப்பன், ஊரல்வாய்மொழி.

பாலத்தில் விழுந்த ஓட்டை

முக்கூடல்-ஆலங்குளம் ரோட்டில் சிங்கம்பாறை விலக்கில் வடிகால் அமைக்கப்பட்டு குழாய் மீது பாலம் கட்டப்பட்டு உள்ளது. அந்த பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, அந்த ஓட்டையை சரிசெய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- ஆறுமுககுமார், முக்கூடல்.

சேதமடைந்த படித்துறை

தென்காசி தாலுகா மேலஆம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் ஊருக்கு வடக்குப்பகுதியில் கடனா ஆறு ஓடுகிறது. அங்கு ஆற்றில் பொதுமக்கள் குளிக்க ஒரேயொரு படித்துறை தான் உள்ளது. அதுவும் இடிந்து சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும், மின்விளக்கு வசதியும் இல்லை. அந்த படித்துறையை சீரமைத்து மின்விளக்கு வசதியும் செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

சாலை சீரமைக்கப்படுமா?

கடையம் யூனியன் தர்மபுரம்மடம் பஞ்சாயத்து சம்பன்குளம் பள்ளிவாசல் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக சிமெண்டு சாலையின் நடுவே பள்ளம் தோண்டினர். குழாய் பதித்த பின்னர் சிமெண்டு கலவையை கொண்டு முறையாக மூடாததால் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் கடும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

- அம்ஜத், முதலியார்பட்டி.

கூடுதல் பஸ்கள் வேண்டும்

தென்காசியில் இருந்து நெல்லைக்கு காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், நெல்லையில் இருந்து தென்காசிக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் எஸ்.எப்.எஸ். பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் தென்காசி, பாவூர்சத்திரம், அடைக்கலப்பட்டினம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் காலை, மாலையில் கூடுதல் பஸ்களை இயக்கினால் பொதுமக்கள் பெரிதும் பயன் அடைவர்.

- தங்கராஜ் ரவி, இலஞ்சி.

தொட்டியில் இருந்து வீணாகும் தண்ணீர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா சிவகளை கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. அதன் மேற்பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

- சரவணன், சிவகளை.

சாலையில் ஓடும் கழிவுநீர்

கோம்பள்ளம் ஊராட்சி அலுவலகம் முன்பு கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு முன்பு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக ரேஷன் கடை, கோவிலுக்கு செல்பவர்கள் முகம் சுளித்தபடி செல்கின்றனர். எனவே, அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

- பாலசுப்பிரமணியன், கோரம்பள்ளம்.


Next Story