கோவை: கோவிலில் சிலை-வாள் சேதம் - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவை: கோவிலில் சிலை-வாள் சேதம் - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

கோவையில் கோவிலுக்குள் புகுந்து சிலை, வாளை உடைத்த ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை மாவட்டம், போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் உப்புலியன் திட்டு என்ற பகுதி உள்ளது. இங்கு சுமார் 60 ஆண்டு கால பழமையான கருப்பராயன் முனியப்பன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவில் பூசாரி வழக்கம்போல் பூஜை செய்துவிட்டு மாலையில் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் இன்று காலை கோவிலை திறக்க வரும்போது கோவிலில் இருந்த சுயம்பு சிலை உடைக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கான்கிரீட்டால் பதிக்கப்பட்டிருந்த சிங்கம் சிலையும், அங்குள்ள முனியப்பன் சிலையில் இருந்த வாளும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த தகவல் வேகமாக பரவியதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் சமாதானம் பேசினர்.

சிலையை உடைத்த மர்ம நபர்கள் விரைவாக பிடிபடுவார்கள் என உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் யார்? எதற்காக அவர்கள் சிலையை உடைத்துச் சென்றனர் என்பது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலில் இருந்த சிலை உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story