சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு


சாதி சான்றிதழ் வழங்கப்படாததால்  நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 14 Aug 2023 4:14 PM IST (Updated: 14 Aug 2023 5:10 PM IST)
t-max-icont-min-icon

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி நல சங்கத்தினர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

சாதி சான்றிதழ் வழங்கப்படாததால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளதாக தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி நல சங்கத்தினர் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சாதி சான்றிதழ்

தமிழ்நாடு குருமன்ஸ் பழங்குடி நல சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையிலான நிர்வாகிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள குருமன்ஸ் பழங்குடியின மக்களால் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வேண்டி பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன்பிறகு தமிழக அரசால் ஊட்டி பழங்குடி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சிறப்பு ஆராய்ச்சி குழு அமைக்கப்பட்டு குருமன்ஸ் பழங்குடியின மக்களின் தொழில், தெய்வ வழிபாடு, பிறப்பு, இறப்பு, மொழி, கலாசாரம் போன்ற அனைத்து பழக்க வழக்கங்களையும் ஆய்வு செய்யப்பட்டு குரும்பா, குரும்பர், குருமன் ஆகியன ஒத்த பெயரான குருமன்ஸ் பழங்குடியினர் தான் என்று அறிக்கை வழங்கப்பட்டு உள்ளது.

எங்களுடைய இனத்திற்கு கலாசாரத்தினை உயர்நீதிமன்றம் ஏற்று கொண்டு கலாசாரத்தின் அடிப்படையில் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் வருவாய் கோட்டாட்சியர்களுக்கு பழங்குடி இயக்குனரால் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளது.

தோ்தல் புறக்கணிக்க முடிவு

அவ்வாறு இருப்பின் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் குருமன்ஸ் எஸ்.டி. சாதிச்சான்று வேண்டி கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், பழங்குடி இயக்குனர், பழங்குடி ஆணையர் அனைத்து இடங்களிலும் பலமுறை 5 ஆயிரம் மனுக்களுக்கும் மேல் சாதிச்சான்று வேண்டி விண்ணப்பித்து சட்ட ரீதியான ஆதாரங்கள் இருந்தும் எந்த விதமான விசாரணையும் செய்யாமல் ஏமாற்றி வருகின்றனர்.

எனவே எங்களுடை பிறப்புரிமையை மீட்டு எடுக்கின்ற வரை தமிழ்நாடு முழுவதும் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மண்எண்ணெய் கேனுடன் வந்த வாலிபர்

செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். இவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குறைதீர்வு கூட்டத்திற்கு வந்தார்.

அப்போது அவரிடம் மண்எண்ணெய் கேன் இருப்பதை அறிந்த போலீசார், அந்த கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அவர் கூறுகையில், தனது வீட்டிற்கு முன்பு உள்ள பொது வழிப்பாதையை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார். அவர் அரசு துறையில் வேலை செய்வதால் அரசு அதிகாரிகள் அவருக்கு சாதகமாகவே செயல்படுகின்றனர்.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து அவரை போலீசார் கூட்டத்திற்கு மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

100 நாள் வேலை

திருவண்ணாமலை தாலுகா காரப்பள்ளம் கிராமம் பொற்குணம் மதுரா பகுதியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வேலை வாய்ப்பு தருகிறார்கள்.

எனவே, 100 நாள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தொடர்ந்து எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story