டெல்டா விவசாயிகள் இணையதளம் வழியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு


டெல்டா விவசாயிகள் இணையதளம் வழியாக  சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு
x

டெல்டா விவசாயிகள் இணையதளம் வழியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு

திருவாரூர்

காவிரி நீரை திறந்து விடக்கோரி டெல்டா விவசாயிகள் இணையதளம் வழியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி கூறினார்.

நிர்வாகிகள் கூட்டம்

திருவாரூரில் டெல்டா விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் உலகநாதன், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் சாமு தர்மராஜ், பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வீரராஜ், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ஜோசப், முருகையன், ராவணன், சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் மாசிலாமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குறுவை பயிர் கருகி விட்டது

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 5 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை சாகுபடி செய்துள்ளனர். மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு என்பது குடிநீருக்கும், மீன்களின் பாதுகாப்பிற்குமான நிலையில் தான் உள்ளது. எனவே குறுவை பயிரை பாதுகாக்க தண்ணீர் வழங்க இயலாத நிலை உள்ளது.

இதனால் டெல்டா கடைமடை ஆற்று பகுதிகளான கீழையூர், தலைஞாயிறு, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் காய்ந்து கருகி விட்டது. கர்நாடகா ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீரை மேட்டூர் அணைக்கு திறந்தால் தான் எஞ்சிய குறுவை சாகுபடியை பாதுகாக்க முடியும்.

சுப்ரீம் கோர்ட்டில் முறையிட முடிவு

கடந்த காலங்களில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு தமிழக விவசாயிகளை பாதுகாத்து இருக்கிறது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள பல ஆயிரம் விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டு இதில் தலையிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எனவே காவிரி நீரை திறந்துவிடக்கோரி விவசாயிகள் தங்களது கோரிக்கையை இணையதளம் வழியாக சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story