அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தொண்டி,
திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவி கலாவதி தலைமை தாங்கினார். வட்டார துணைத்தலைவர்கள் கீதா, செங்கோல் ராணி, சாந்தி, சுதா, தீபா, ராணி, காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாடானை வட்டார தலைவி பாலயோகினி, செயலாளர் ஈஸ்வரி, பொருளாளர் சிவானந்தவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கிற பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக மாற்றுகின்ற திட்டத்தை கைவிட வேண்டும். பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் மற்றும் கோடைகால விடுமுறை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடிகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நீண்ட காலம் பணி புரிந்து வரும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கலாவதி நன்றி கூறினார்.