காசோலையில் கையெழுத்திடும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு


காசோலையில் கையெழுத்திடும் துணைத்தலைவரின் அதிகாரம் பறிப்பு
x

கணியம்பாடி ஊராட்சியில் காசோலையில் கையெழுத்திடம் துணைத்தலைவரின் அதிகாரத்தை பறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணியம்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவி செல்விக்கும், துணைத்தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சகிலாவுக்கும் நீண்ட நாட்களாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஊராட்சி நிர்வாகத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மற்றும் ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் நிர்வாக செலவினங்களுக்கு பி.எப்.எம்.எஸ். மற்றும் காசோலைகளில் துணைத்தலைவி சகிலா கையெழுத்து போட மறுப்பதாக கூறப்படுகிறது. காசோலையில் கையெழுத்து போடாததால் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பணிகள் செயல்படுத்த முடியாமல் ஊராட்சி மன்ற தலைவி அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு புகார் சென்றது. தொடர்ந்து கடந்த 23-ந்தேதி கலெக்டர் கணியம்பாடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது தலைவி மற்றும் துணைத்தலைவிக்கு சில அறிவுரைகளை வழங்கி சென்றார்.

இந்த நிலையில் துணைத்தலைவியின் காசோலையில் கையெழுத்து போடும் இணை அதிகாரத்தை சகிலாவிடம் இருந்து பறித்து தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சகிலாவின் கையெழுத்திடும் இணை அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்டபோது, துணைத்தலைவியின் கையெழுத்திடும் இணை அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்காலிகமாக 12-வது வாா்டு உறுப்பினர் சுனில்குமாருக்கு காசோலையில் கையெழுத்து போடும் இணை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' என்றாா்.


Next Story