அரசு பணியாளர் சங்கத்தினர் தர்ணா
அரசு பணியாளர் சங்கத்தினர் தர்ணா
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி, சரண்டர் உடனடியாக வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம், ஒப்பந்த பணியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்ய வேண்டும். தனியார் மயமாக்கும் அரசாணைகளை நீக்கிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் பணியினை நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்திற்கு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். நாகை மாவட்ட தலைவர் நாகராஜு முன்னிலை வகித்தார். இதில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொருளாளர் அருள்மணி, அரசு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில தலைவர் செல்வன், பட்டதாரி- தமிழாசிரியர் சங்க ஆலோசகர் ஆன்ரூஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.