மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் கிராமத்தில் கொள்ளிடக்கரையோரத்தில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தீமிதி திருவிழா கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மகாமாரியம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். மாலையில் பூங்கரகம், அக்கினி கரகம், சக்தி கரகம், திரிசூலம் ஏந்திய பக்தர்கள் கோவிலின் ரத வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். கோவிலின் முன்பு அக்கினி குண்டம் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன.

முதலில் பூங்கரகம் ஏந்திய பக்தர் குண்டம் இறங்கி தீ மிதித்த பிறகு, அக்கினி கரகம், சக்தி கரகம், திரிசூலம் ஏந்திய பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீ மிதிப்பதற்காக விரதம் இருந்து கங்கணம் கட்டி தயார் நிலையில் இருந்த பக்தர்கள் தொடர்ந்து குண்டம் இறங்கி தீ மிதித்து வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாமாரியம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story