தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

எரியாத சோலார் விளக்கு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் கிராமத்தில் கூத்தனூர் செல்லும் சாலையில் ஓடை அருகே புதிதாக சோலார் விளக்கு ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டது. இந்த விளக்கு பழுதாகி கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விவசாய வயலுக்கு செல்லும் விவசாயிகள், மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெயர் பலகை இல்லாத ஊர்

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் 3 நுழைவுப்பகுதிகளிலும் ஊரின் பெயர் பலகை இல்லாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து லாடபுரத்திற்கு வரும் மக்கள் ஊர் பெயர் தெரியாமல் சுற்றித்திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக தொலைவுக்கு சென்று மீண்டும் திரும்பி வரும் அவலநிலை உள்ளது. இதேபோல் துறையூர்-பெரம்பலூர் சாலையில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் உள்ளது. அங்கேயும் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், துறையூர்- பெரம்பலூர் சாலையில் உள்ள லாடபுரம் பிரிவுச் சாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் உள்ள நீர்‌ உப்பு நீராக இருப்பதால், குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோடைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து லாடபுரம் வழியாக அம்மாப்பாளையம் செல்லும் காவிரி குடிநீர் குழாயில் பொது குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்து இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அடிக்கடி ஏற்படும் மின்தடை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புது வேட்டக்குடி ஊராட்சியில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மின்தடை ஏற்படும்போது இப்பகுதி மக்கள் வெளியே நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நிறைவடையாத ஜல் ஜீவன் திட்டம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் பிரதம மந்திரியின் திட்டமான அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி 2 ஆண்டுகள் ஆகியும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story