தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் கடைவீதி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இவை ஆங்காங்கே கூட்டமாக நின்றுகொண்டு, இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சேறும், சகதியுமான சாலை
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூரில் ரெயில்வே கேட் உள்ளது. ரெயில்வே கேட் பூட்டப்படும் போது இரு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ரெயில்வே கேட் ஓரத்தில் மண்சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக போடப்பட்ட மண் சாலை மிகவும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அதிக அளவு கற்களை ஏற்றி செல்லும் லாரிகள்
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்குவாரிகளில் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான ஜல்லிகளையும் ,பல்வேறு ரகமான பெரிய கற்களையும் லாரிகளில் ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று இறக்கி வருகின்றனர். இந்நிலையில் லாரிகளில் அதிக அளவு கற்களை ஏற்றி செல்லும்போது உயரமாக உள்ள கற்கள் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்து செல்கின்றன. இதனால் லாரிக்கு பின்னால் வரும் வாகனங்கள் மீது கற்கள் பட்டு விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சிதிலமடைந்த மின்கம்பம்
கரூர் மாவட்டம், நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை செல்லும் சாலையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் மின்மோட்டோர்களுக்கும் மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக கம்பத்தில் உள்ள சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்து வருகின்றன. இதனால் மின்கம்பத்தில் கம்பிகள் மட்டுமே தெரிகிறது. இதனால் மின் கம்பம் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய நிழற்குடை
ஈரோடு- கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புன்னம்சத்திரம் அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் நலன் கருதி பஸ்களுக்கு சென்று வருவதற்காக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் மழை, வெயில் காலங்களில் அமர்ந்து சென்று வந்தனர். குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு எந்த பஸ்களும் அந்த இடத்தில் நிற்காமல் சென்று வருவதால் பயணிகள் அங்கு சென்று நிழற்கூடத்தில் அமர்ந்து பஸ்சில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அங்கு யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக பயணிகள் அமரும் வகையில் போடப்பட்டிருந்த காங்கிரீட் சிலாப்களை சில சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்பவர்கள் நிழற்குடையில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த மதுபாட்டிலில் உள்ள மதுவை அருந்திவிட்டு உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு பாட்டிலை உடைத்து செல்கின்றனர். இதனால் இந்த நிழற்குடை மது பிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.