ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொறுப்பு மறுப்பு: ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொறுப்பு மறுப்பு:  ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
x

சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

ஈரோடு

காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு பொறுப்பு மறுக்கப்பட்டதால் ஈரோடு மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

ராகுல்காந்தி பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவராக உள்ள ராகுல்காந்தி இந்தியா ஒற்றுமை பயணம் என்ற பெயரில் 150 நாட்கள் நடைபயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் அவர் தனது பாதயாத்திரையை தொடங்குகிறார். தமிழ்நாட்டில் ராகுல்காந்தி பாத யாத்திரை செய்யும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி 18 குழுக்களை நியமித்து உள்ளார்.

தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எந்த ஒரு குழுவிலும் இடம் வழங்கப்படாமல் பொறுப்பு மறுக்கப்பட்டு உள்ளது. மேலும், அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெராவுக்கும் குழுக்களில் பொறுப்பு வழங்கப்படவில்லை. இது ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லாம் பாஷா-வுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

ராஜினாமா

இதுகுறித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெ.சுரேஷ், துணைத்தலைவர் கே.என்.பாஷா ஆகியோர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதே தனது குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வருபவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கட்சிக்கு நெருக்கடியான நேரங்களில் தேவைப்படும் அவர் கட்சியை வளர்ப்பதற்காக உடல்நலத்தை கூட பார்க்காமல் பாடுபட்டு வருகிறார்.

அதுபோல் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா, அவருக்கு கட்சி அளித்து உள்ள பொறுப்புகளையும், மக்கள் அளித்து உள்ள பொறுப்புகளையும் சரியாக செய்து வருகிறார். பொதுமக்களை அவரது இல்லத்திலேயே சந்தித்து குறைகள் கேட்டு நிவர்த்தி செய்கிறார். கூட்டணி கட்சியினர் உள்பட அனைத்து கட்சியினருடன் நட்புடன் இருக்கிறார். இப்படிபட்டவர்களுக்கு ராகுல்காந்தி வருகை குழுக்களில் பொறுப்பு மறுக்கப்பட்டு இருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், மாவட்ட சிறுபான்மை நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்கிறோம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story