முன்பதிவு செய்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை பயணிகள் அதிருப்தி
ரெயில்களில் வடமாநில தொழிலாளர்கள் தொல்லை பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு தினமும் வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரிய நகரங்கள் முதல், குக்கிராமங்கள் வரை அவர்கள் ஊடுருவி விட்டார்கள்.
பெரிய நிறுவனம் என்றாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, அங்கிங்கெனாதபடி எங்கும் வேலை செய்கிறார்கள். ஒரு சிறு டீக்கடையை எடுத்துக் கொண்டாலும் கல்லாவில் இருப்பவரைத் தவிர, பலகாரங்கள் போடுவது, டீபோடுவது, கிளாசுகளை கழுவுவதுவரை அவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கடும் உழைப்பாளிகள். மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு இணையாக உழைக்கத் தெரிந்த நம்மவர்கள் என்ன ஆனார்கள்?
இலவசங்களால் கொஞ்சம் வயிற்றில் பசியாறிப் போவதால், சோம்பேறி ஆனார்கள். விளைவு நாம் செய்யவேண்டிய வேலைகளை, வடமாநிலத்தவர் வந்து செய்கிறார்கள். கல்லாவை நம்மிடம் அவர்கள் கைப்பற்றாமல் இருந்தால், சரி.
தொல்லைகள்
அதேநேரம் வடமாநில தொழிலாளர்களின் அதிக வரவால் நமக்கு பல்வேறு வேலைகள் நடந்தாலும் தொல்லைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
எடுத்துக்காட்டாக சொல்வது என்றால், ரெயில் பயணங்களில் அவர்களின் செயல்கள் நம்மை எரிச்சல் அடைய செய்கின்றன. பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது, வகுப்பு மாறி பயணம் செய்வது, சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு முன்பதிவு செய்த பெட்டிகளில் புகுந்து பயணம் செய்வது, பாக்குகளை வாயில் போட்டு குதப்பி கண்ட, கண்ட இடங்களில் உமிழ்வது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற சட்டவிரோதச் செயல்களை அச்சம் இல்லாமல் செய்கிறார்கள்.
இது பற்றி பல்வேறு தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:-
டிக்கெட் எடுப்பதில்லை
தென்னக ரெயில்வே பயணிகள் நலச்சங்க பொதுச்செயலாளர் கடலூரை சேர்ந்த ராமகிருஷ்ணன்:- வடமாநிலத்திற்கு ரெயிலில் சென்றால், அவர்கள் யாரும் டிக்கெட் எடுப்பதில்லை. டிக்கெட் எடுத்து சென்ற நமது இருக்கையில் வந்து அமர்ந்தாலும் அவர்களை யாரும் தடுக்க முடியாது. அதே நிலை தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால் டிக்கெட் எடுத்து செல்லும் நாம் தான் அவதிப்பட்டு வருகிறோம். இதை தட்டிக்கேட்டு தகராறு செய்தால், போலீசார் நம் மீது தான் வழக்குப்பதிவு செய்வார்கள். இதற்கு டிக்கெட் பரிசோதகர்கள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் டிக்கெட் எடுத்து, நகல் அடையாள அட்டையுடன் சென்றாலும் டிக்கெட் பரிசோதகர்கள் நம்மை அசல் சான்றிதழ் கொண்டு வர மாட்டீர்களா என்று திட்டுவார்கள். ஆனால் டிக்கெட் இல்லாமலும், சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு இருக்கையில் அமர்ந்து வரும் வடமாநிலத்தவரை யாரும் கண்டுகொள்வதில்லை. இதற்கு அரசும், தென்னக ரெயில்வே நிர்வாகமும் சேர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கக்கூடாது.
கையேந்தும் நிலை ஏற்படும்
விருத்தாசலம் என்ஜினீயர் அப்துல் ஹாஜித்:-
முன்பெல்லாம் வடமாநிலங்களுக்கு நாம் ரெயிலில் சென்றால், நாம் முன்பதிவு செய்து பயணம் செய்தால் கூட அவர்களுடைய ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கும். நம்முடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு புகையிலை போட்டு துப்பிக்கொண்டு அட்டகாசம் செய்வார்கள். ஆனால் தமிழகத்தில் அந்த நிலைமை இல்லாமல் இருந்தது. தற்போது வட மாநிலத்திற்கு சென்றால் என்ன நிலைமையோ, அதே நிலை தமிழகத்திலும் பரவி வருகிறது. தமிழகத்திலும் நாம் வட மாநிலத்தவருக்கு பயந்து கொண்டு தான் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரெயில் பயணங்களில் மட்டுமல்ல.
தமிழகத்தில் உள்ள நிலப்பரப்புகளை கொஞ்சம், கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறார்கள். வியாபாரத்திலும், அவர்களுடைய ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம். தமிழர்களுக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு எடுக்கும் போது அதிகமாக அட்வான்ஸ் மற்றும் வாடகை கொடுத்து கடைகளை எடுத்துக்கொண்டு பெரும்பாலான வர்த்தகத்தை கைப்பற்றி விட்டனர். 2 அல்லது 3 ஆண்டுகளில் அந்த கடையை சொந்தம் ஆக்கி விடுகின்றனர். இதனால் தமிழ்நாட்டு வியாபாரிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வணிக நோக்கத்திற்கான இடங்களின் மதிப்பு தாறுமாறாக எகிறிக் கொண்டிருக்கிறது. இப்படியே சென்றால், தமிழர்களாகிய நாம் அவர்களிடம் கையேந்தும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
வாக்குவாதம்
சிதம்பரத்தை சேர்ந்த ரெயில் பயணி அருண்ராஜ்:-
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு வேலைகளுக்காக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் ரெயில்களில் பயணிக்கும் போது முன்பதிவு செய்யாமலேயே முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி அமர்ந்து விடுகின்றனர். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி என்று எடுத்து கூறினாலும் இறங்க மறுக்கிறார்கள். இதனால் பல மாதங்களுக்கு முன்பே சவுகரியமாக பயணம் செய்ய வேண்டும் என திட்டமிட்டு முன்பதிவு செய்து ரெயிலில் பயணம் செய்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். நிறைய பெட்டிகளில் டிக்கெட் பரிசோதகர்களும் இருப்பதில்லை. இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களுக்கும், வட மாநிலத்தவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ஆகவே ரெயில்வே நிர்வாகம் இது குறித்து ஆய்வு செய்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பெட்டிகள் ஒதுக்க வேண்டும்
வீரமுடையாநத்தத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பாரி:-
சமீப காலமாக தமிழகத்திற்கு வட மாநில தொழிலாளர்களின் வருகை அதிகரித்து வருகிறது. ரெயில் பயணத்தின் போது தமிழர்கள் மனிதாபிமானம், இரக்க குணத்துடன் செயல்படுவார்கள். ஆனால் வடமாநிலத்த வர்கள் முன்பதிவு செய்த நமது இருக்கையில் அமர்ந்து கொண்டு நம்மிடமே தகராறு செய்வார்கள். அவர்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. மூத்த குடிமக்களுக்கு மேல் படுக்கை வசதி கிடைத்தால், சிலர் மனிதாபி மானத்துடன் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கீழ் படுக்கை தருவார்கள். பெரும்பாலான பயணிகள் அதை பற்றி கவலைப்படுவதில்லை. மத்திய அரசு கூடுதல் பெட்டிகளை அமைத்து வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் தனிப்பெட்டிகள் ஒதுக்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
வடமாநில தொழிலாளர்கள்
தெற்கு ரெயில்வே முதன்மை பயணச்சீட்டு ஆய்வாளர் (ஓய்வு) கே.ரவி கூறும் போது, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண வகை டிக்கெட் வாங்கி இருப்பவர்களை பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு பயணித்தால் அவர்களுக்கு அபராதம் விதித்து, அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் அவர் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிக்கு மாறச்செய்து பயணிக்க அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து டிக்கெட் பரிசோதகர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் கும்பலாக வரும் வடநாட்டு தொழிலாளர்கள் இறங்கிச் செல்ல டிக்கெட் பரிசோதகர்கள் கூறினாலும் அவர்கள் கேட்பதில்லை. இதனால் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் உதவியுடன் இறக்கி விடுகிறோம். இதனால் சில நேரங்களில் விரும்பதகாதப்படி டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. தமிழ்நாடு மட்டும் அல்லாது வடமாநிலங்கள் செல்லும் ரெயில்களிலும் இவை அதிகரித்து வருகின்றன. எனவே இவற்றை முழுமையாக தடுக்க ரெயில்வே நிர்வாகம் தேவை இல்லாதவர்கள் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் பயணம் செய்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்தால்தான் முற்றிலும் தடுக்க முடியும். அரசும் வடநாட்டு தொழிலாளர்கள் வருகையையும் கட்டுப்படுத்த வேண்டும்' என்றார்.