இயற்கை நீரோடைகளை திசை திருப்புவதை ஏற்க முடியாது: எஸ்டேட்டுகளில் சட்டவிரோத நீர்வீழ்ச்சிகளுக்கு 'சீல்'


இயற்கை நீரோடைகளை திசை திருப்புவதை ஏற்க முடியாது: எஸ்டேட்டுகளில் சட்டவிரோத நீர்வீழ்ச்சிகளுக்கு சீல்
x

இயற்கை நீரோடைகளை திசை திருப்புவதை ஏற்க முடியாது என்றும், எஸ்டேட்டுகள், ரிசார்ட்டுகளில் சட்டவிரோத நீர்வீழ்ச்சிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஏராளமான இயற்கை அருவிகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளன.

இவற்றுக்கு நீர் ஆதாரம் மலைத்தொடர்கள். இந்த நீரானது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. நீர்வீழ்ச்சிகளில் மகிழ்ச்சிக்காக மட்டுமல்லாமல், அதன் மருத்துவ குணத்துக்காகவும் பொதுமக்கள் குளிக்கின்றனர்.

சுற்றுச்சூழல் சீரழிவு

குற்றலாம் உள்ளிட்ட அருவிகள் பாயும் இடங்களில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். பொருளாதார ரீதியாக வசதி மிக்க சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அருவிகளை சுற்றிலும் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, இணையதளங்களில் விளம்பரம் செய்து வருமானம் கொழிக்கின்றனர்.

உலகின் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் பகுதியாக மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. ஆனால் இங்குள்ள இயற்கை அருவிகளின் நீர் வழிப்பாதையை தனிநபர்கள் தங்களின் ஆதாயத்திற்காக மாற்றி சுற்றுச்சூழல் சீரழிவை ஏற்படுத்துகின்றனர். இதனால் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுகிறது.

இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையாக செல்லும் நீரோடைகள், சிற்றாறுகள், அருவிகள், ஆறுகளை பழைய நிலைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மேற்கண்ட 5 மாவட்டங்களில் தனியார் உருவாக்கிய செயற்கை நீர்வீழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள், இணையதள முகவரிகள், ஆதாரங்களை சமர்ப்பித்தார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் புவியியல் மாற்றங்களுக்குப் பிறகு தோன்றும் இயற்கை நீர்வீழ்ச்சிகள், நீரோடைகளை சட்டவிரோதமான முறையில் ரிசார்ட்டுகள், எஸ்டேட்கள் போன்ற தனியாரால் திசை திருப்பி விடுவதை அனுமதிக்க முடியாது. செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிய ஒரு குழுவை ஏற்படுத்த நெல்லை, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

சீல் வைக்க உத்தரவு

இந்த குழு, மாவட்ட வன அலுவலர்களின் உதவியுடன் தனியார் ரிசார்ட்டுகள், எஸ்டேட்டுகளில் ஆய்வு நடத்தி, சட்டவிரோத நீர்வீழ்ச்சிகள் இருந்தால் அவற்றுக்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். அதன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விதிமீறலுக்கு துணை போன அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்து மாவட்ட கலெக்டர்கள் விரிவான அறிக்கையை இந்த கோர்ட்டில் வருகிற 1-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story