"நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்" அண்ணாமலை குற்றச்சாட்டு


நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான் அண்ணாமலை குற்றச்சாட்டு
x

“நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

நெல்லை,

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நெல்லை பாளையங்கோட்டையில் அவருடைய மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியலை பொறுத்தவரை நாங்கள் தி.மு.க.வின் பொய்யை தோலுரித்து காட்டுவதை அவதூறு பரப்புவதாக அவர்கள் கூறுகிறார்கள். என்ன அவதூறு பரப்பினேன்? யார் குறித்து அவதூறு பரப்பினேன் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். நான் பேசியது அவதூறு என்றால், ராமநாதபுரம் மாநாட்டில் பிரதமர் மோடி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது அவதூறு இல்லையா? தி.மு.க.வின் அவதூறு வழக்குகளை கண்டு பயப்படபோவதில்லை.

நீட் தேர்வு விவகாரம்

சில நேரங்களில் தி.மு.க.விற்கு அவர்கள் பாணியிலேயே நாங்கள் பதிலடி கொடுக்க வேண்டி உள்ளது. நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டவர்கள் தொடர்பாக குற்றவாளிகளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் சேர்க்க வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி அவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க.தான். இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்த காலம் முதல் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் தான் நீட் தற்கொலைகள் நடைபெறுகின்றன. நீட் தேர்வில் முதல் 10 இடங்களை பெற்றவர்களில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இனிமேல் நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை எதுவும் நடந்தால் அது தொடர்பாக பேசும் அமைச்சர் மீது வழக்கு பதிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவருக்கு ஆறுதல்

இதைத்தொடர்ந்து அண்ணாமலை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவர் சின்னத்துரை, அவருடைய சகோதரி சந்திராசெல்வி ஆகியோரை பார்த்து ஆறுதல் கூறினார்.

இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வள்ளியூரில் பாதயாத்திரை

இதையடுத்து வள்ளியூர் நம்பியான்விளை பத்திரகாளி அம்மன் கோவில் முன்பு இருந்து அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார். வள்ளியூர் புதிய பஸ் நிலையம் வடக்கு பகுதியில் தனது பாதயாத்திரையை முடித்த அண்ணாமலை திறந்த வேனில் நின்று பேசினார்.

மலையை பார்த்தால் பிடிக்காது

அப்போது அவர், 'தி.மு.க.காரர்களுக்கு மலையை பார்த்தாலும் பிடிக்காது. இந்த அண்ணாமலையை பார்த்தாலும் பிடிக்காது. மலையை பார்த்தாலே அதை எப்படி வெட்டி எடுக்கலாம் என்று தான் நினைக்கிறார்கள்.

ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசிக்கு மத்திய அரசு 32 ரூபாய் மானியம் வழங்குகிறது. தமிழக அரசு வெறும் 2 ரூபாய் மட்டுமே வழங்கி அதற்கு பல விளம்பரங்களை தேடிக் கொள்கிறது. எனவே நீங்கள் பிரதமர் மோடியை ஆதரிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

களக்காடு

பின்னர் மாலையில் களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசல் பகுதியில் இருந்து பாதயாத்திரையை தொடங்கிய அண்ணாமலை தொண்டர்களுடன் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று களக்காடு அண்ணாசிலை அருகில் வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றினார்.


Next Story