எடை குறைவாக பிறந்த இரட்டை குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்கள்


எடை குறைவாக பிறந்த இரட்டை குழந்தைகளை காப்பாற்றிய டாக்டர்கள்
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் எடை குறைவாக பிறந்த இரட்டை குழந்தைகளை டாக்டர்கள் காப்பாற்றினர்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி சவுமியா. இவர்களுக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் சவுமியா கர்ப்பமாகி கடந்த 19.1.2023-ந் தேதி பிரசவத்திற்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்தன. பிறந்த குழந்தைகள் இருவரும் மிகக் குறைந்த எடையில் இருந்துள்ளனர். ஒரு குழந்தை 910 கிராமும், மற்றொரு குழந்தை 1250 கிராமும் இருந்துள்ளன. அந்த 2 குழந்தைகளுக்கும் தீவிர சிகிச்சை அளித்து தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இருந்தது.

உடனே ராமநாதபுரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ் வழிகாட்டுதலின் பேரில் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் நாகநாதன், தலைமை குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் முத்தரசன் ஆகியோர் தலைமையில் குழந்தை டாக்டர்கள் ரமேஷ், தினேஷ் பாபு, பிரியதர்ஷினி, மகப்பேறு டாக்டர்கள் கார்லின் சத்திய பிரபா, சண்முகப்பிரியா ஆகியோர் 29 வாரங்கள் அந்த இரட்டை குழந்தைகளை வென்டிலேட்டர் வசதியுடன் 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அந்த இரட்டைக்குழந்தைகள் அதிக எடை கொண்ட குழந்தைகளாக மாறியுள்ளன. மேலும் தாய் மற்றும் குழந்தைகள் நன்கு உடல் நலம் தேறி உள்ளதால் அவர்களை மருத்துவ குழுவினர் தீவிர பரிசோதனை செய்து நேற்று அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது அந்த குடும்பத்தினரை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் மருத்துவ குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் குறை மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றி சாதனை படைத்த முதல் சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story