வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம்வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம்வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம்வீடு, வீடாக சென்று வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக,கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாக்காளர் விவரம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், (31.12.2005 அன்று வரை பிறந்தவர்கள்) விடுபட்ட வாக்காளர்கள், தங்கள் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் வாக்காளர் பட்டியல், சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024 தொடர்பாக காலஅட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்த கால அட்டவணையில், முதற்படியாக வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணியானது 21-7-2023 முதல் 21-8-2023 வரை நடக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாகத்துக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று, குடும்ப தலைவர்களிடம் வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து வருகின்றனர்.

வாய்ப்பு

அதன்படி வாக்காளர் பட்டியலில் சேர தகுதியான வாக்காளர்கள் (1.10.2023 அன்று தகுதியான நபர்கள்), எதிர்காலத்தில் சேர தகுதியான வாக்காளர்கள் (1.01.2024 அன்று தகுதியான நபர்கள்), எதிர்காலத்தில் சேர தகுதியான வாக்காளர்கள், பலமுறை பதிவு, இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் பதிவுகளில் திருத்தம், மாற்றுதிறனாளி வாக்காளர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், வாக்காளர்களிடம் இருந்து படிவம்-6 (பெயர் சேர்த்தல்), படிவம் -7 (பெயர் நீக்கல்) மற்றும் படிவம் 8 (பெயர், முகவரி திருத்தம், புதிய வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்தை மேம்படுத்தல்) ஆகியவற்றை பெற்று வருகின்றனர். மேலும், வெளி நாடு வாழ் இந்தியர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, படிவம் 6 ஏ மற்றும் ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு படிவம் 6 பி ஆகியவற்றை பெற்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர்களை சேர்ப்பதற்கும், புதிய வாக்காளர் அடையாள அட்டை, பெயர், முகவரி மாற்றம், ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கு ஏதுவாக இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story