வரைவு பட்டியல் வெளியீடு:திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 3 புதிய வாக்குச்சாவடிகள்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்


வரைவு பட்டியல் வெளியீடு:திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 3 புதிய வாக்குச்சாவடிகள்:கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நேற்று 1,619 வாக்குச்சாவடிகள் அடங்கிய வரைவு பட்டியலை கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று வெளியிட்டார். புதிதாக திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் 3 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வரைவு பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒத்துழைப்பு

கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசுகையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 2,500 வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கும் பொருட்டு, வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,500-க்கு மேல் இருந்தால், அதனை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 300 வாக்காளர்கள் சுமார் 2 கிலோ மீட்டருக்கு அதிகமாக சென்று வாக்களிக்கும் சூழல் இருந்தால் புதிதாக வாக்குச்சாவடி அமைக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதி

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 1,619 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் மொத்தம் 3 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஆகையால் அரசியல் கட்சி பிரமுகர்கள் புதிதாக வாக்குச்சாவடி அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம். வாக்குச்சாவடி பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் நடைபெறும் போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசும் போது, தூத்துக்குடி முருகேசன்நகர் பகுதி மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்க வேண்டி உள்ளது. அந்த பகுதியிலேயே உள்ள புதிதாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும். முள்ளக்காட்டில் ஒரே பள்ளிக்கூடத்தில் அமைந்து உள்ள வாக்குச்சாவடிகளில் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்கும் நிலை உள்ளது. அதனை தனியாக பிரித்து அமைக்க வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் சாமிநத்தம் பகுதியில் தனியாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லை பாண்டி, தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், செய்தி மக்கள் தொர்பு அலுவலர் நவீன்பாண்டியன், அரசியல் கட்சி பிரமுகர்கள் தி.மு.க.வை சேர்ந்த ஆனந்தசேகரன், சுப்பிரணியன், கிருபாகரன், அ.தி.மு.க.வை சேர்ந்த சந்தணம், பா.ஜனதா கட்சியை சேர்ந்த கிஷோர்குமார், சிவராமன், காங்கிரசை சேர்ந்த முத்துமணி, ஆம்ஆத்மி கட்சி குணசீலன், தே.மு.தி.க. நாராயணமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story