மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற யானைகள்


மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே நின்ற யானைகள்
x
தினத்தந்தி 16 Jun 2023 11:52 PM IST (Updated: 17 Jun 2023 1:10 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா வனப்பகுதியில் சாலையின் குறுக்கே 4 யானைகள் நின்றன. இதனால்பஸ் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

வேலூர்

குடியாத்தம் வனச்சரகத்தை ஒட்டியபடி அமைந்துள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ள கவுண்டன்யா யானைகள் சரணாலயத்தில் இருந்து யானைகள் கூட்டம் அடிக்கடி தமிழக எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. குடியாத்தத்தை அடுத்த சைனைகுண்டா கிராஸ் ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதில் 8 கிலோமீட்டர் வனப்பகுதியில் உள்ளது.

இந்த வனப்பகுதியில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் மற்றும் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 4 யானைகள் மோர்தானா வனப்பகுதியில் உலாவந்தன. நேற்று மாலையில் குடியாத்தத்தில் இருந்து மோர்தானா சென்ற டவுன் பஸ் மீண்டும் குடியாத்தம் நோக்கி வரும்போது மோர்தானா வனப்பகுதியில் இருக்கள்குட்டை என்ற பகுதியில் யானைகள் பிளிரும் சத்தம் கேட்டது.

உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டார். பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்தில் இருந்தனர். சிறிது நேரத்தில் சாலையில் நான்கு யானைகள் நின்றிருந்தன. இதை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பயணிகள் மற்றும் கிராம மக்கள் கூச்சிலிட்டனர். இதனையடுத்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

மாலை மற்றும் இரவு நேரத்தில் குடியாத்தத்தில் இருந்து பணி முடித்துவிட்டு மோர்தானா செல்ல கிராம மக்கள் இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் விளக்கு வசதி இல்லாததால், இரவில் யானைகள் உலாவருவது தெரியாமல் அச்சத்துடந் சென்று வருகிறார்கள்.


Next Story