புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு: முதல்-அமைச்சர் பெருமிதம்


புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை அதிகரிப்பு: முதல்-அமைச்சர் பெருமிதம்
x

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னை,

அரசு பள்ளிகளில் பிளஸ்-2 வரை படித்துவிட்டு உயர்கல்வி படிப்புக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

பட்டமளிப்பு விழா

கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு இந்ததிட்டம் பயனுள்ளதாக இருக்கிறது. மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையே சென்னை ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்று பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உயர வேண்டும்

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். அதிலும் முதல் பட்டம் சிறப்பானது. முதல் தலைமுறையாக பட்டம் பெறுவது அதனை காட்டிலும் பரவசமானது. உங்களது பட்டங்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.

நீங்கள் பெற்ற அறிவு, உங்களை மேலும்மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடை பெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து நீங்கள் விடைபெறவில்லை. பாடங்களை படிப்பவர்களாக மட்டுமல்ல பாடங்களை உருவாக்கக்கூடியவர்களாக நீங்கள் உயர வேண்டும்.

உங்களது பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கவுரவம் மட்டுமல்ல. அது உங்கள் அடிப்படை உரிமை. இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் 6 பேர் பதக்கம் பெறுவது மிகச்சிறப்பு.

அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கல்லூரியை இடிக்க மேற்கொண்ட முயற்சியை தடுக்க மாணவிகள், பேராசிரியைகள் நடத்திய அறவழி போராட்டத்துக்கு நான் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தேன். இதன்காரணமாக ஒரு மாதம் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். இந்த கல்லூரிக்காக சிறை சென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாதது. இந்த கல்லூரிக்காக சிறை சென்றதை துன்பமாக கருதவில்லை. அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம்.

மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண் - உயர் கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. மாணவிகள் தங்கி படிப்பதற்கு ஏதுவாக கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே விடுதி கட்டித்தர வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனை ஏற்று கல்லூரி வளாகத்தில் விடுதி கட்டி தரப்படும்.

ராணி மேரி கல்லூரி சாதனை கல்லூரியாக இருக்கிறது. இது, பட்டம் வழங்கும் கல்லூரியாக மட்டுமல்லாமல் திறமையின் கிடங்காகவும் இயங்கி கொண்டிருக்கிறது.

நூறாண்டுகளுக்கும் மேலாக, கல்வி பணியாற்றி வரும் இந்த கல்லூரி, வரும் காலங்களிலும் பெண் கல்வியின் மகத்துவத்தை உலக அரங்கிலும் முன்னிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.

33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டு, இன்று 5 ஆயிரம் மாணவிகளுடன் மாபெரும் அளவில் இந்த கல்லூரி உயர்ந்து நிற்கிறது. மிக உயர்ந்த நோக்கம் இருந்தால்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியம். இதே போன்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக மாணவிகள் அனைவரும் தங்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். யார் எதை சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெற்ற பட்டம் முழுமை பெறும்.

பட்டம் என்பது தொடக்கம்

நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம் - ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும்.

அந்த தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.

3,259 பேருக்கு பட்டம்

விழாவில் 2 ஆயிரத்து 702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுகலை பட்டமும், 84 மாணவிகள் எம்.பில். பட்டமும் என 3 ஆயிரத்து 259 மாணவிகள் பட்டம் பெற்றனர்.

ஒவ்வொரு துறையிலும் முதல் 3 இடங்களை பிடித்த 104 மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கினார். இவர்களில் 5 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, மு.பெ.சாமிநாதன் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், த.வேலு எம்.எல்.ஏ., உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி, இணை இயக்குனர் ராவணன், கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டாளர் அனந்தலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story