பிளஸ்-2 தேர்வை 26,160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்


பிளஸ்-2 தேர்வை 26,160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 160 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 32,171 பேர் எழுதுகிறார்கள்.

தேர்வுக்குழு கூட்டம்

திருப்பூர் மாவட்ட தேர்வுக்குழு கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 தேர்வுகள் மார்ச் மாதம் 14-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரையிலும், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முதல் 20-ந் தேதி வரையும் நடைபெற உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வை 92 தேர்வு மையங்களில் 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 214 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 தேர்வை 92 மையங்களில் 213 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 496 பேர் என மொத்தம் 26 ஆயிரத்து 160 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

32,171 பேர் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு எழுதுகிறார்கள்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 106 தேர்வு மையங்களில் 354 பள்ளிகளில் படிக்கும் 30 ஆயிரத்து 687 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 1,484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வுக்காக 6 இடங்களில் வினாத்தாள்கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பில் பராமரிக்கப்படும்.

மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 92 தலைமை ஆசிரியர்கள், 92 துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்களாக 1,608 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106 தலைமை ஆசிரியர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்கள் 1,780 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படை

தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றை கண்காணிப்பதற்கு கலெக்டர் தலைமையில் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் ஆய்வு செய்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மேல்நிலை பொதுத்தேர்வுக்காக முதன்மை கல்வி அலுவலர் மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இணை இயக்குனர் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் பதிவேடு வைக்கப்பட்டு பறக்கும்படையினர் பதிவு செய்வார்கள். தேர்வு மையங்கபிளஸ்-2 தேர்வை 26,160 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்ளில் புகார் மற்றும் ஆலோசனை பெட்டி வைக்கப்படும்.

பஸ் பாஸ்

பொதுத்தேர்வு நடக்கும் நாளில் மாணவ-மாணவிகள் பஸ் பாஸ் இல்லாவிட்டாலும், சீருடை அணிந்து வந்தால் நடத்துனர்கள் அனுமதிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு பணியில் ஈடுபடுபவர்கள் ஆழ்ந்த கவனத்துடன், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் மன அமைதியுடனும், தைரியத்துடனும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் சிறப்பாக தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ.க்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர், மின்வாரிய செயற்பொறியாளர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story