அகழ் வைப்பகம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்


அகழ் வைப்பகம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும்
x

கொந்தகை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழ் வைப்பகம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

கொந்தகை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழ் வைப்பகம் ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

அமைச்சர்கள் ஆய்வு

திருப்புவனம் அடுத்த கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய அகழ் வைப்பக கட்டிட பணிகளை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை அறிந்து கொள்வதற்கான தடயங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் பொருட்களை உலக தமிழர்கள் அனைவரும் பார்வையிடுவதற்கு ஏதுவாக புதிய அகழ் வைப்பக கட்டிடம் தமிழக அரசின் சார்பில் ரூ.12.21 கோடி மதிப்பீட்டில் 7 பிரிவுகளாக கட்டப்பட்டு நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.

காலதாமதம்

அகழ் வைப்பகத்தில் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டெடுக்கப்படும் பொருட்கள் உலகத்தரத்திலான வகையில் காட்சிப்படுத்திட துறை வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு சுவற்றில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள், புதிய தொழில்நுட்பத்தில் ஒலி அமைப்புடன் கண்ணாடியில் காட்சிப்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏறத்தாழ 10,210 வகை பொருட்களை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அகழ்வாராய்ச்சி பொருட்களை காட்சிப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகளினால்தான் அகழ் வைப்பகம் திறந்து வைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை கிடைத்துள்ள பொருட்களையும் காட்சிப்படுத்திட இந்த காலதாமதம் ஒரு வகையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

ஜனவரி மாதம்

மதுரை மாநகருக்கு சுற்றுலா சம்பந்தமாகவும், ஆன்மிக சம்பந்தமாகவும் உலக அளவிலான பயணியர்கள் வந்து செல்கின்றனர். அவர்களும் அகழ் வைப்பகத்தினை பார்வையிட ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்று பின்பு முதல்-அமைச்சர் மூலம் அகழ் வைப்பகம் திறந்து வைக்கப்படும். கீழடியில் அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கும் பொருட்களை காட்சிப்படுத்தியும் அப்பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு புரியும் வண்ணம் குறும்படங்கள் மூலம் விளக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (பாரம்பரிய கட்டட கோட்டம்) மணிகண்டன், திருப்புவனம் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், கீழடி தொல்லியல் துறை இணை இயக்குனர் ரமேஷ், தாசில்தார் கண்ணன், அகழ் வைப்பக ஒப்பந்ததாரர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



Next Story