கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அருப்புக்கோட்டை அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை,
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த மீராசாகிப் மகன் பீர்முகமது (வயது 34). டிரைவரான இவர் வாடகை காரில் பாலக்காடு சென்று விட்டு பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் காயல்பட்டினம் திரும்பிக் கொண்டிருந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருக்கும்போது உடல் சோர்வாக இருந்ததால் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலை கஞ்சநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் ஓய்வெடுத்தார். அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பியது. இதையடுத்து பீர்முகமது காரில் இருந்து இறங்கி விட்டார். இதையடுத்து கார் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே பீர்முகமது தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.