காரைக்குடியில் சோதனைக்கு சென்ற-போலீசாரை அதிர வைத்த போலி பணக்கட்டுகள்- 2 பேர் கைது
காரைக்குடியில் போலீசாரை அதிர வைத்த போலி பணக்கட்டுகள் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரைக்குடி
காரைக்குடியில் போலீசாரை அதிர வைத்த போலி பணக்கட்டுகள் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோசடி புகார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியில் ஒருவர் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.10 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு நிதி நிறுவனத்தினர் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் கடன் தர முடியும். டெபாசிட் பணத்திற்கு வட்டியும் தருகிறோம் என்று கூறியுள்ளனர்.
அதை நம்பிய அந்த பெண் அங்கு ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் சொன்னபடி ரூ.10 லட்சம் கடனை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இது குறித்து அப்பெண் கேட்டபோது ஏதேதோ காரணங்களை கூறி வந்தனராம். தான் ஏமாற்றப்படுவதாக நினைத்த அப்பெண் இது குறித்து காரைக்குடி போலீசில் புகார் செய்தார்.
அதிரடி ேசாதனை
உடனடியாக அந்நிறுவனத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கு கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டனர்.
அதனை பற்றி விசாரணை நடத்திய போது அத்தனை கட்டுக்களிலும் மேலும், கீழும் மட்டும் அசல் ரூ.500 நோட்டுக்களை வைத்திருந்தனர். மற்ற அனைத்தும் வெள்ளை தாள்களாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்..
உடனடியாக போலி பணக்கட்டுக்களை பறிமுதல் செய்த போலீசார் அங்கு இருந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த ஒருவர், தன்னிடமும் இக்கும்பல் பண மோசடி செய்துவிட்டதாக புகார் செய்துள்ளார். இதுகுறித்த போலீஸ் விசாரணையில், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி உள்ளிட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரியவருகிறது.