கால்வாயை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்


கால்வாயை சொந்த செலவில் சீரமைத்த விவசாயிகள்
x

கம்பம் அருகே கால்வாயை சொந்த செலவில் விவசாயிகள் சீரமைத்தனர்.

தேனி

கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி முல்லைப்பெரியாற்றில் இருந்து தனி கால்வாயாக உத்தமுத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் உத்தமபுரம், க.புதுப்பட்டி, காக்கில் சிக்கையன்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், வடக்கு பரவு, உ.அம்மாபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 222 ஏக்கர் நிலங்களில் இரு போக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த கால்வாயில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் புதர்மண்டி கிடந்தது. மேலும் கால்வாய் கரைகள் உடைந்து மண் சரிந்து இருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என்று உத்தமுத்து கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து உத்தமுத்து கால்வாயை விவசாயிகள் சொந்த செலவில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வரை 2 பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வருகிற ஜூன் 1-ந்தேதி முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம் ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் சொந்த செலவில் கால்வாயை சீரமைக்க தீர்மானித்து இன்று முதல் அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


Next Story