மாரியம்மன் கோவில்களில் முளைப்பாரி திருவிழா
திருப்பத்தூர் மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாரியம்மன் கோவில்களில் நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா
திருப்பத்தூர் நடுத்தெருவில் உள்ள கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் ஆடிமாதம் வளர்பிறை செவ்வாயில் காப்பு கட்டப்பட்டு திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந் தேதி காப்புக்கட்டுடன் தொடங்கி முளைப்பாரி போடப்பட்டது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது.
கோவிலில் கூடிய பெண்கள் முளைப்பாரியினை சுற்றி கும்மியடித்தனர். பின்னர் நேற்று காலை கோவிலில் இருந்து முலைப்பாரியினை சுமந்து திருத்தளிநாதர் கோவில், கோட்டைக்கருப்பர் கோவில், தேரோடும் வீதி, தபால் அலுவலக சாலை, பஸ் நிலையம் மற்றும் பெரியகடை வீதி வழியாக ஊர்வலமாக வந்து சீதளிகுளத்தில் கரைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பெண்கள்
அதேபோல் தென்மாபட்டு பூமாயியம்மன் கோவிலிலும் முளைப்பாரி திருவிழா காப்புக்கட்டுடன் தொடங்கி பாரி போடப்பட்டது. நேற்று பெண்கள் தென்மாபட்டியிலிருந்து பாரி சுமந்து வந்து பூமாயியம்மன் கோவில் குளத்தில் கரைத்தனர். பிரபாகர் காலனி மாரியம்மன் கோவிலிருந்தும் பெண்கள் பாரிசுமந்து வந்தனர்.
நான்கு ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்தும் பெண்கள் பாரி சுமந்து வந்து சீதளிகுளத்தில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.