கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை பகுதியில் திடீர் தீ


கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை பகுதியில் திடீர் தீ
x

இளையான்குடி அருகே கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை பகுதியில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை பகுதியில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிற்சாலை

இளையான்குடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் தொழிற்சாலை அமைந்து உள்ளது. இளையான்குடி -சிவகங்கை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழிற் சாலையில் தென் மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு அனுப்பப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 16 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இந்த தொழிற்சாலையில் இருந்து செல்கின்றது. தொழிற் சாலைக்கு எதிரே சுமார் 30 அடி தூரத்தில் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள பனை மரங்கள், கருவேல மரங்கள், குப்பைகளில் பற்றி எரிந்துள்ளது. காற்றின் வேகத்தால் பனை மரத்தில் பிடித்து எரிந்த தீயால் தொழிற்சாலை முழுவதும் புகை மண்டலமானது. உடனே கியாஸ் நிறுவன அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, அதற்கு முன்பாகவே தொழிற்சாலையில் இருந்த தீயணைப்பு வாகனங்களை கொண்டு வந்து தண்ணீரை பீச்சி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெரிய விபத்து தவிர்ப்பு

அதற்கு பின்பு சிறிது எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு முற்றிலுமாக அணைத்தனர். இந்த திடீர் விபத்தால் தொழிற்சாலை பெரும் பாதிப்புக்கு உள்ளாக இருந்த நேரத்தில் தொழிற்சாலையில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் இளையான்குடி- சிவகங்கை சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புடன் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.


Related Tags :
Next Story