விநாயகர் சிலை ஊர்வலத்தில் வெடிகள் வெடிக்க கூடாது


விநாயகர் சிலை ஊர்வலத்தில் வெடிகள் வெடிக்க கூடாது
x

கடலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வெடிகள் வெடிக்க கூடாது என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடலூர்

கடலூர்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகளை நிறுவ உத்தேசித்துள்ள இடம் தனியாருக்கு சொந்தமானது எனில், நில உரிமையாளரின் ஒப்புதல் கடிதமும், பொது இடமாக இருப்பின், சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபனையில்லா சான்றுடன் வருவாய் கோட்ட அலுவலருக்கு படிவம் 1-ல் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒலிபெருக்கி வைப்பதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு தீயணைப்புத் துறையினரின் சான்று பெறப்பட வேண்டும். சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்திற்கு, மின் இணைப்பு எங்கிருந்து பெறப்படுகிறது என்பதற்கான மின்வாரிய அலுவலரின் சான்று பெறப்பட வேண்டும்.

தனித்தனி வழிகள்

படிவம் 2-ல் சிலை வைக்க அனுமதி பெற்ற பின்னரே சிலைகளை வைக்க வேண்டும். சிலை நிறுவப்படும் கொட்டகை எளிதில் தீப்பிடிக்காத பொருட்களைக் கொண்டு உள்ளே செல்லவும், வெளியேறவும் தனித்தனி வழிகளுடன் அமைக்கவேண்டும். சிலையானது அடிப்பகுதி உள்பட 10 அடி உயரத்திற்குள் இருக்க வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை தவிர்த்து பெட்டி வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தவும். அதனை காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

விழாக்குழுவின் சார்பில் இரு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் பாதுகாப்புக்கு இருக்கவும், மின்தடை ஏற்படும் நேர பயன்பாட்டிற்கு ஜெனரேட்டர் வசதி வைத்திருக்க வேண்டும். பிற மதத்தவரின் வழிபாடு, மத நம்பிக்கைகளை விமர்சிக்கும் வகையில் கோஷங்கள் செய்தல் கூடாது.

அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகள்

மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரை, உப்பனாறு, கொள்ளிடம், வெள்ளாறு ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் மேற்கண்ட நீர்நிலைகளில் சிலை நிறுவப்பட்ட நாளில் இருந்து 3 நாட்களுக்குள் சிலைகளை கரைக்க விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை கரைப்பதற்கான ஊர்வலங்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். சிலைகளை 4 சக்கர வாகனங்கள், அதாவது மினி லாரி, டிராக்டர் ஆகியவற்றின் மூலமாக கொண்டு செல்ல வேண்டும். மாட்டு வண்டி, மீன்பாடி வண்டி, 3 சக்கர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. சிலைகள் ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் கரைக்கப்படும் போது எவ்வித வெடிபொருட்களும் வெடித்தல் கூடாது. சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு பேப்பர் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன பூக்கள், அலங்காரப்பொருட்கள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story