இரட்டை இலை சின்னத்தில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்: அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்


இரட்டை இலை சின்னத்தில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்: அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்
x

இரட்டை இலை சின்னத்தில் முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம் அடைந்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் (வயது 88). வயது மூப்பு காரணமாக இவர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 12 மணி அளவில் அவருடைய உடல்நிலை மோசமானது.

இதனையடுத்து அவருடைய குடும்பத்தினர், திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்தபோது, மாரடைப்பால் மாயத்தேவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அஞ்சலி

இதைத்தொடர்ந்து மாயத்தேவரின் உடல், சின்னாளப்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் மாயத்தேவரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கல்லூரி படிப்பு

மாயத்தேவரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டி என்ற கிராமம் ஆகும். கடந்த 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி, பெரியகருப்பத்தேவர்-பெருமாயி தம்பதிக்கு மகனாக பிறந்தார் மாயத்தேவர்.

சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்தார். சென்னை ஐகோர்ட்டில் அவர் வக்கீலாக பணிபுரிந்தார்.

மாயத்தேவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு வெங்கடேசன், செந்தில் ஆகிய 2 மகன்களும், சுமதி என்ற மகளும் உண்டு. இவர்களில் மூத்த மகன் வெங்கடேசன் இறந்து விட்ட நிலையில், தனது 2-வது மகன் செந்தில் பராமரிப்பில் மாயத்தேவர் இருந்தார்.

அ.தி.மு.க.வின் முதல் எம்.பி.

தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில், 1973-ம் ஆண்டில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டது.

திண்டுக்கல் நாடாளுமன்ற வேட்பாளராக மாயத்தேவர் களம் இறங்கினார். முதன் முதலாக இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மாயத்தேவர் அமோக வெற்றிப்பெற்று வாகை சூடினார்.

இந்த வெற்றி தான், அ.தி.மு.க.வுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. இந்திய நாடாளுமன்றத்துக்கு அ.தி.மு.க. சார்பில், முதல் எம்.பி.யாக அவர் அடியெடுத்து வைத்தார்.


Next Story