7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழில் முடக்கம்


7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழில் முடக்கம்
x
தினத்தந்தி 25 Dec 2022 6:45 PM GMT (Updated: 25 Dec 2022 6:45 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் 7 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது.

கடல் சீற்றம்

வங்கக்கடலில் அடுத்தடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 330 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்புகின்றன. அங்கு கடல் ெதாடர்ந்து சீற்றமாக காணப்படுகிறது.

மீன்பிடி தொழில் முடக்கம்

இதனால் மீனவர்களால் கடலுக்கு செல்ல முடியவில்லை. வேதாரண்யம் பகுதியில் 5 ஆயிரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக கடலுக்கு செல்லாததால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. மீன்பிடிக்க செல்லவில்லை. வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

மீனவர்கள் கவலை

கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

ஒரு சில மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ஒரு வார காலமாக மீன்பிடிக்க செல்லாததால் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், வேதாரண்யம் பகுதியில் ரூ.1 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கபட்டுள்ளதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story