தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி


தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக அந்த பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பருவமழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பகல் நேரங்களில் சாரல் மழையாகவும் இரவு நேரங்களில் அடைமழையாகவும் பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக பகல் நேரங்களிலும் மழை இடைவிடாமல் பெய்து வருவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரத்தில் கடந்த 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் மழைவெள்ளம் சூழ்ந்தது.

மழை வெள்ளம்

இதேபோல ஆயுதப்படை மைதானம், பட்டணம்காத்தான், ஓம்சக்திநகர், ரோஸ்நகர் உள்ளிட்ட விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வீடுகளில் கட்டி குடியிருந்து வருபவர்கள் மழைவெள்ளம் சூழ்ந்ததால் வெளியில் வருவதற்கு அஞ்சி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். நகரில் தாழ்வான பகுதிகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற வழி உள்ளதால் அதனை எளிதாக வெளியேற்றி வருகின்றனர். ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததாலும் மோட்டார் வைத்து உறிஞ்சி வெளியேற்ற முடியாததாலும் தண்ணீரை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

நடவடிக்கை

இதன்காரணமாக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் டிராக்டர், லாரிகளில் வைத்து தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைவெள்ள நீரை உறிஞ்சி எடுத்து வெளிப் பகுதிகளுக்கு கொண்டு சென்று கொட்டி வருகின்றனர். கடினமாக அதிக செலவுமிக்க பணி என்றாலும் மக்களின் அவதியை போக்க பட்டணம்காத்தான் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளிலும் மழைவெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த வெள்ள நீரில் பள்ளம்படுகுழி தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து வருகின்றனர். பள்ளம் படுகுழிகளில் விழுந்து விபத்து ஏற்படாமல் தடுக்க அவற்றினை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழை அளவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:- கடலாடி-4.8, வாலிநோக்கம்-4.6, கமுதி-1.5, பள்ளமோர்குளம்-5, மண்டபம்-11, ராமநாத புரம்-41.2, பாம்பன்-40.4, ராமேசுவரம்-77.6, தங்கச்சிமடம்-35.8, திருவாடானை-9.2, தொண்டி-4.8. சராசரி-14.74.


Next Story