காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு


காவிரியில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை:  கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு   மாவட்ட வருவாய் ஆய்வாளர் நேரில் ஆய்வு
x

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாமக்கல்

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு

மேட்டூர் அணை நிரம்பியதையொட்டி உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான பள்ளிபாளையம், குமாரபாளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய இடங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் உத்தரவின் பேரில் நேற்று போலீசார் காவிரி கரையோர பகுதிகளில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

மேலும் ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கவோ, குழிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், குழந்தைகளை ஆற்றுப்பகுதிக்கு செல்லமால் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒலிபெருக்கி, தண்டோரா மற்றும் விளாம்பர பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உணவு வசதி

குமாரபாளையத்தில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று மாலை காவிரி ஆற்றில் கரையை தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால் கலைமகள் வீதி இந்திரா நகர், மணிமேகலை வீதி இந்திரா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட ஆற்றங்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட, நகராட்சி நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரி ஆற்றங்கரை பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன், தாசில்தார் தமிழரசி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படியும், அவர்களுக்கு தங்குவதற்கு இடம் மற்றும் உணவு வசதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறினர். அதன்படி குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை சின்னப்பநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி, புத்தர் வீதி நகராட்சி உயர்நிலைப்பள்ளி, நடராஜா திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பள்ளிபாளையம், பரமத்திவேலூர்

இதேபோல் பள்ளிபாளையம் காவிரி ஆற்றின் கரையோர வெள்ள பாதிப்பு ஏற்படும் ஜனதா நகர், புதன்சந்தை பேட்டை, அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி கதிரேசன் ஆய்வு நடத்தினார். இதையடுத்து வெள்ள பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்களை தங்க வைப்பதற்கான மண்டபம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

பரமத்திவேலூர் வட்டாரத்திற்குட்பட்ட சோழசிராமணியில் இருந்து மோகனூர் வரையிலான காவிரி கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரண வீரன் தலைமையிலான போலீசார், பொதுப்பணித்துறையினர், செயற்பொறியாளர் மற்றும் வருவாய்த்துறையினர் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் போலீசார் காவிரியாற்றில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள அண்ணா பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் வருவதற்கும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்துள்ளனர்.


Next Story