பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்


பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்கக்கோரி மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 18 Jun 2023 8:59 PM GMT (Updated: 19 Jun 2023 1:14 AM GMT)

பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்கக்கோரி மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் உரிமையை வழங்கக்கோரி மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

பவானிசாகர் அணை

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய அணையாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் நீர்த்தேக்க பகுதி 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு ஒப்பந்தம் (டெண்டர்) விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1,000-க்கும் மேற்பட்ட...

அணையில் பவானிசாகர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கங்களை சேர்ந்த 622 மீனவர்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் மீன்பிடித்து வருகிறார்கள். இதனிடையே அணையில் தனியாருக்கு விடப்பட்ட மீன் பிடி உரிம ஒப்பந்தம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில் பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் உரிமத்தை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர் ஆலோசனை கூட்டம்

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் பவானிசாகர் அருகே உள்ள வெள்ளாளபாளையம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 'பவானிசாகர் அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை பவானிசாகர் மற்றும் சிறுமுகையில் உள்ள மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடிக்கும் உரிமத்தை வழங்கலாம் என ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவுப்படி மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்கும் வரை நாளை (அதாவது இன்று) முதல் அணையில் மீன்பிடி தொழிலில் மீனவர்கள் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது,' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலை நிறுத்த போராட்டம்

இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'பவானிசாகர் அணையில் மீன் பிடிக்க உரிமம் எடுத்துள்ள தனியார் ஒப்பந்ததாரருக்கான ஒப்பந்தம் முடிவடைகிறது. கூட்டுறவு சங்கங்களுக்கு மீன்பிடி உரிமத்தை வழங்கலாம் என ஐகோர்ட்டு தெரிவித்தும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள் இதை கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரருக்கு மீண்டும் 2 மாத காலம் ஒப்பந்தத்தை நீட்டித்து கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள், தனியார் ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுவதால் 19-ந் தேதி (அதாவது இன்று) முதல் பவானிசாகர் அணையில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்,' என்றனர்.


Next Story