நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி


நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி
x

நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி

நாகப்பட்டினம்

நாகையில், நிதி நிறுவனம் நடத்தி ரூ.8 கோடி மோசடி செய்த நிறுவன தலைவர், இயக்குனர்கள் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நிதி நிறுவனம்

புதுச்சேரி சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக நாகையை சேர்ந்த கோவிந்தராஜ், ஆறுமுகம், தமிழ்வாணன், காரைக்காலை சேர்ந்த பழனிவேல், ராஜமூர்த்தி, கலியபெருமாள், கனகராஜ், பிரபாகரன் ஆகிய 8 பேர் செயல்பட்டு வந்தனர்.

ரூ.8 கோடி மோசடி

இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அதை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று நிறுவன இயக்குனர்கள், பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து நாகை பொதுமக்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 என சுமார் ரூ.8 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்தில் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 13 பேர் ரூ.8 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 270 செலுத்தி இருந்தனர்.

9 பேர் மீது வழக்கு

சில மாதங்களுக்கு பிறகு பணம் செலுத்தியவர்கள் நிதிநிறுவன இயக்குனர்களை நேரில் சந்தித்து பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் இயக்குனர்கள், நிதி நிறுவன தலைவர் முகமது அலி வெளிநாட்டில் இருப்பதாக கூறி பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட தட்சிணாமூர்த்தி நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவிந்தராஜ், ஆறுமுகம், முகமது அலி உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----------


Related Tags :
Next Story