எலிகள் கடித்த, அழுகிப் போன பழங்களில் "ப்ரெஷ் ஜூஸ்.."- அதிரடி காட்டிய அதிகாரிகள்


எலிகள் கடித்த, அழுகிப் போன பழங்களில் ப்ரெஷ் ஜூஸ்..- அதிரடி காட்டிய அதிகாரிகள்
x

எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை குறைந்த விலையில், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

சென்னை,

கோயம்பேடு சந்தையில் எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி வந்து குறைந்த விலைக்கு ஜூஸ் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.

சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ஒரு ஜூஸ் கடை முழுவதும் அழுகிப் போன துர்நாற்றம் வீசியுள்ளது.

கடை முழுவதும் சோதனை செய்யப்பட்டதில், கோயம்பேடு சந்தையில் இருந்து எலிகள் கடித்த மற்றும் அழுகிப் போன பழங்களை வாங்கி வந்து "ப்ரெஷ் ஜூஸ்" எனும் பெயரில் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக கடை உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த கடை உரிய அனுமதி இன்றி ஆவணம் ஏதும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.



Next Story